தமிழ்நாடு செய்திகள்

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலத்தில் இன்று கடையடைப்பு போராட்டம்

Published On 2022-11-22 11:35 IST   |   Update On 2022-11-22 11:35:00 IST
  • கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்குமிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் ஏற்பட்டு வந்தது.
  • கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி விதிமுறைகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.

நகராட்சி எல்லைக்கு 4 கிலோ மீட்டருக்கு அப்பால் சுங்கச்சாவடி அமைய வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த விதிமுறைகளை மீறி கப்பலூர் சுங்கச்சாவடி மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி எல்லைப்பகுதியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதனால் திருமங்கலம் வாகன உரிமையாளர்களுக்கும், கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்குமிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் ஏற்பட்டு வந்தது. சுங்கச்சாவடியை அகற்ற கோரி பல்வேறு போராட்டங்களும் நடந்தப்பட்டது.

4 வழிச்சாலையை பயன்படுத்தாத டி.கல்லுப்பட்டி, பேரையூர் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது.

இந்த நிலையில் போராட்டம் நடத்தும் போது அவ்வப்போது உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிப்பதும், பின்னர் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் கட்டணம் வசூலிப்போம் என கூறுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

இதனால் கப்பலூர் சுங்கச்சாவடியில் அவ்வப்போது வாகன ஓட்டிகளுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக அண்மையில் கலெக்டரிடம் முறையிட்டும் சுங்கசாவடி நிர்வாகம் தனது நடவடிக்கையில் இருந்து பின் வாங்கவில்லை.

முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய அமைச்சர்கள் உள்பட பலர் கோரிக்கை விடுத்தாலும் சுங்கச்சாவடி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த திருமங்கலம் பகுதி வாகன உரிமையாளர்கள் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு என்ற ஒரு குழுவை அமைத்து கடந்த 3 மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எந்த நடவடிக்கையும் எட்டப்படாததால் கடந்த 13-ந் தேதி திருமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் திருமங்கலத்தின் அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போதைய தமிழக முதல்வர் தேர்தல் பிரசாரத்தின் போது கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவது என் முதல் வேலை என கூறினார். ஆனால் முதல்வரும் இதில் கவனம் செலுத்தவில்லை என்பது வாகன ஓட்டிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்தும், சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியும் இன்று கடையடைப்பு போராட்டமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்து அறிவித்தனர்.

அதன்படி கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கு எதிராக திருமங்கலம் நகர்பகுதி முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன. இதனால் திருமங்கலத்தில் காய்கறி கடைகள், சிறிய கடைகள், பெரிய கடைகள், உணவகங்கள் என 5000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுரை ரோடு, விருதுநகர் ரோடு, பஸ் நிலையம், உசிலம்பட்டி சாலை, சின்னக்கடை வீதி பகுதிகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஆட்டோக்கள், கார்கள் வேன்கள் மற்றும் எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. வெளியூருக்கு வேலைக்கு செல்பவர்களை மட்டுமே பஸ் நிலையத்தில் காண முடிந்தது.

Similar News