தமிழ்நாடு

அமெரிக்கப் பெண்ணை மணம் முடித்த தஞ்சை வாலிபர்: தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது

Published On 2023-11-19 07:02 GMT   |   Update On 2023-11-19 07:02 GMT
  • தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை சங்கர நாராயணன்-அன்னி டிக்சன் திருமணம் நடைபெற்றது.
  • திருமணமானது தமிழில் வேத மந்திரங்கள் ஓதி நடைபெற்றது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரை சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 35). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அமெரிக்கா மசாச்சூசெட்ஸ் பகுதியை சேர்ந்தவர் அன்னி டிக்சன் (35) . இவர் எம்.ஏ. சைக்காலஜி படித்து விட்டு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் சங்கர நாராயணன்-அன்னி டிக்சன் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் அன்னோன்யமாக காதலித்து வந்தனர்.

இதையடுத்து சங்கரநாராயணன் அமெரிக்க பெண்ணை காதலித்து வரும் விஷயத்தை தஞ்சையில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதற்கு அவர்களும் மகனின் காதலை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். இதை போல் அன்னி டிக்சனும் தனது காதலை பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் வாங்கினார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது.

அதன்படி தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை சங்கர நாராயணன்-அன்னி டிக்சன் திருமணம் நடைபெற்றது. தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் சங்கர நாராயணன் பெற்றோர், உறவினர்கள், அமெரிக்காவில் அவருடன் வேலை பார்த்த நண்பர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அன்னி டிக்சன் பெற்றோர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

திருமணமானது தமிழில் வேத மந்திரங்கள் ஓதி நடைபெற்றது. மேலும் மணமகன் சங்கர நாராயணன் திருக்குறள் வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

விழாவில் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த அனைவரும் தமிழ் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை அணிந்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கடல் கடந்து காதலித்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு திருமணத்தை நடத்தி வைத்த இரு வீட்டு பெற்றோரையும் பலர் பாராட்டினர்.

Tags:    

Similar News