தமிழ்நாடு

கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்ப சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு

Published On 2023-06-01 07:33 GMT   |   Update On 2023-06-01 07:33 GMT
  • எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பொதுமக்களின் பஸ் பயணம் அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
  • வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக ‘ஸ்பேர்’ பஸ்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. மே மாதம் முழுவதும் விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடம் திறப்பதாக இருந்தது.

ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் 7-ந்தேதிக்கு பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர், சுற்றுலா தலங்கள் சென்றவர்கள் பள்ளி திறப்பது தாமதம் ஆனதால் பயணத்தை தள்ளி வைத்தனர்.

மேலும் ஒரு வாரம் கழித்து பள்ளிகள் திறப்பதால் வெளியூர் சென்றவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு வருவது தள்ளிப்போகிறது. 3-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

அதனால் அரசு போக்குவரத்து கழகத்திலும் உள்ள பஸ்களை முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்டதூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு அதிகரித்துள்ளது.

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பொதுமக்களின் பஸ் பயணம் அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக 'ஸ்பேர்' பஸ்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 5-ந்தேதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் இருந்தும் பிற நகரங்களில் இருந்தும் மக்கள் அதிகளவில் பயணம் செய்கிறார்கள். திருமணம், உள்ளிட்ட சுபகாரியங்கள் அதிகம் நடப்பதால் வெளியூர் பயணம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,200 பஸ்கள் தவிர கூடுதலாக 500 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல வெளியூர்களில் இருந்தும் சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனாலும் மக்கள் கூட்டம் எதிர்பாராமல் வருகிறது. குறிப்பாக நள்ளிரவு நேரத்தில் வந்தால் திடீரென பஸ் வசதியை எவ்வாறு ஏற்படுத்தி கொடுக்க முடியும். வெளியூர் செல்பவர்கள் முன்பதிவு செய்தால் அதனை கணக்கிட்டு தேவையான பஸ் வசதியை ஏற்படுத்தி தர முடியும்.

விழுப்புரம், சேலம், மதுரை, கோவை, கும்பகோணம் ஆகிய போக்குவரத்து கழகத்தில் இருந்து கூடுதலாக பஸ்கள் பெறப்பட்டு கூட்டத்தை சமாளிக்க திட்டமிட்டுள்ளோம். 7-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News