சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு- அரசு ஆஸ்பத்திரியில் 3 நாட்களாக இருந்த தொழிலாளியின் உடல்
- 2 சுடுகாட்டிலும் குமாரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக என்ன செய்வது என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்தனர்.
- கடந்த 3 நாட்களாக அரசு ஆஸ்பத்திரியிலேயே உடல் இருந்தது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வேகவதி ஆற்றின் கரையோரம் இருந்த சுமார் 700 வீடுகள் அகற்றப்பட்டு அதில் குடியிருந்தவர்களுக்கு கீழ்கதீர்பூர் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.மேலும் வீடுகள் இல்லாதவர்களுக்கும் அங்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் குடியேறினர். இந்த வளாகத்தின் 8-வது பிளாக்கில் தச்சு தொழிலாளியான குமார் என்பவர் தனது மனைவி தேவி மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார்.
கடந்த 5-ந் தேதி சரக்கு வாகனம் ஏறி இறங்கியதில் குமார் படுகாயம் அடைந்தார். அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. அந்த பகுதியில் உள்ள 2 சுடுகாட்டிலும் குமாரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக என்ன செய்வது என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்தனர்.
இதனால் உடலை சென்னையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 3 நாட்களாக அரசு ஆஸ்பத்திரியிலேயே உடல் இருந்தது. இதனால் குடும்பத்தினர் மிகவும் மனவேதனை அடைந்தனர். இது பற்றி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மாவட்ட நிர்வாகம் குமாரின் உடலை தாயாரம்மன் குளம் அருகே உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய அனுமதி அளித்தது.
இதையடுத்து குமாரின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் இருந்து 3 நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர் அங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் தாயார் அம்மன் பகுதியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதுகுறித்து கீழ்கதீர்பூர் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறியதாவது:-
நாங்கள் வேகவதி நதிக்கரை யோரம் சொந்தமாக வீடு கட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்தோம். ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு எந்தவித நிவாரணமும் அளிக்காமல் வேகவதி நதியோரம் இருந்த வீடுகளை இடித்து தள்ளி விட்டு, நபருக்கு ரூ.1.50 லட்சம் பெற்றுக் கொண்டு இந்த குடியிருப்பு பகுதியில் குடியேற அனுமதித்தனர்.
இந்த குடியிருப்பில் சமுதாயக்கூடம், கால்வாய் வசதி, கழிவு நீர் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. எங்கள் குடியிருப்பு பகுதிக்கு சுடுகாடு என்பது மிக மிக அவசியமானது.
அதைக் கூட இந்த செய்யாமல் விட்டு உள்ளனர். பகுதியில் மின் மயானம் அமைத்து தர வேண்டும். அப்படி இல்லாவிடில் ஏற்கனவே தந்த வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறி விடுவோம். அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு என்னென்ன பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.