தமிழ்நாடு

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடுக்காக பா.ம.க போராட்டம்: ராமதாஸ்

Published On 2024-04-11 08:41 GMT   |   Update On 2024-04-11 08:41 GMT
  • ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை; ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழக அரசு தரவில்லை.
  • வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 31.3.2022 அன்று சுப்ரீம் போர்ட்டில் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு நினைத்திருந்தால் அடுத்த இரு வாரங்களில் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், அதன்பின் 9 மாதங்கள் கழித்து நவம்பர் 17-ந்தேதி தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பின் இரு மாதங்கள் கழித்து 12.1.2023-ந்தேதி வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதி பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின் இரு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது; நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவும் இன்றுடன் நிறைவடைந்து விட்டது. ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை; ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழக அரசு தரவில்லை.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து போராடித்தான் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராகத்தான் இருக்கிறது. இதை உணர்ந்து வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News