தமிழ்நாடு செய்திகள்

பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் இளமையானவர்களா?

Published On 2024-02-09 12:32 IST   |   Update On 2024-02-09 12:32:00 IST
  • பாரதிய ஜனதா ஆட்சி பல ஆண்டுகள் தொடரும்.
  • அண்ணாமலையின் பணி எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

கோவை:

டெல்லியில் பாரதிய ஜனதாவில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்களான சேலஞ்சர் துரை, சின்னசாமி, ரத்தினம், செல்வி முருகேசன் ஆகியோர் விமானம் மூலம் கோவை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு பாரதிய ஜனதாவினர் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரவேற்புக்கு பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, சின்னசாமி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாரதிய ஜனதா ஆட்சி பல ஆண்டுகள் தொடரும். கோவைக்கு தேசிய நீரோட்டம் தான் பக்கபலமாக இருக்கும். அதை நினைத்து தான் நாங்கள் பாரதிய ஜனதாவில் இணைந்திருக்கிறோம்.


ஊழல் பட்டியல் வெளியிடும் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நாங்கள் பயணித்து அவரது கரத்தை வலுப்படுத்துவோம். அண்ணாமலையின் பணி எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

பா.ஜ.க.வில் தற்போது இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.வினர் வயதானவர்கள் என விமர்சிக்கின்றனர். அப்படியானால் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன் எல்லாம் இளமையானவர்களா?

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பா.ஜ.க. துணை தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி. ராமலிங்கம் கூறுகையில் எம்.ஜி.ஆர். உடன் பணிபுரிந்த நேர்மையானவர்கள் இன்று தூய ஆட்சியை தமிழகத்துக்கு பாரதிய ஜனதாவால் தான் தர முடியும் என்பதற்காகவும், அண்ணாமலை கரத்தை வலுப்படுத்தவும் இணைந்துள்ளனர். தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தமிழகம் வரும்போது அ.தி.மு.க., தி.மு.க.வில் இணைந்து இன்னும் பலர் பா.ஜ.க.வில் இணைய உள்ளனர் என்றார்.

Tags:    

Similar News