பாளை அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த பெண்ணை சரமாரியாக வெட்டிய தம்பி
- கடந்த ஆண்டு சங்கர் கொலை செய்யப்பட்டார்.
- மகேந்திரன் அரிவாளால் கோமதியை சரமாரியாக வெட்டினார்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் நொச்சி குளத்தை சேர்ந்தவர் சங்கர் மனைவி கோமதி (வயது 25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் சென்னை கிண்டியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு சங்கர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோமதி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரது 2 குழந்தைகளில் ஒரு குழந்தையை சங்கரின் பெற்றோரும், மற்றொரு குழந்தையை கோமதியின் பெற்றோரும் அழைத்து சென்று வளர்த்து வருகின்றனர்.
மேலும் குழந்தைகளை யார் பராமரிப்பது என்பது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளி வந்த கோமதி இன்று காலை தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து குழந்தையை என்னிடம் தந்து விடுங்கள் என கேட்டுள்ளார்.
அப்போது அவருக்கும் அவரது தம்பி மகேந்திரன் (22) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மகேந்திரன் அரிவாளால் கோமதியை சரமாரியாக வெட்டினார். இதில் கோமதி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். உடனே மகேந்திரன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிவந்திபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று கோமதியை மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.