தமிழ்நாடு

ஓபிஎஸ் வழக்கு- இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஐகோர்ட் மறுப்பு

Published On 2024-03-25 06:34 GMT   |   Update On 2024-03-25 06:34 GMT
  • அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்கவில்லை.
  • மேல்முறையீட்டு மனு மீது எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவு.

சென்னை :

அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க கோரி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18 ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? இல்லையா? இதுகுறித்து நிலுவையில் உள்ள பிரதான வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை தொண்டர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த தனக்கு, கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்ததாக தனது மேல் முறையீட்டு மனுவில் ஓபிஎஸ் கூறியிருந்தார். மேலும், அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் வரும் திங்கட்கிழமை (மார்ச்-25) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.

அதன்படி, இன்று ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை விலக்க இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் முடிந்த பிறகு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் மேல்முறையீட்டு மனு மீது எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை ஜூன் மாதம் 10-ந்தேதிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News