சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2-வது நாளாக ஆய்வுக்கு வருகை: கனகசபை மீது ஏறி தரிசனம் செய்த அதிகாரிகள்
- திட்டமிட்டப்படி இன்று 2-வது நாளாக ஆய்வு நடத்த அதிகாரிகள் குழுவினர் வந்தனர்.
- அவர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் கோவில் பகுதியில் ஆய்வு செய்தனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் நிலங்கள், நகைகள், வரவு-செலவு விபரங்களை நேற்றும், இன்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆய்வுக்கு கோவில் பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது. ஆகமவிதிப்படி கோவிலில் நடைபெறும் பூஜைகளில் தலையிடக்கூடாது என நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டினர்.
என்றாலும் திட்டமிட்டப்படி அறநிலையத்துறை வேலூர் இணை ஆனையர் சுகுமார் தலைமையில், பழனிகோவில் இணை ஆனையர் நடராஜன், கடலூர் துணை ஆனையர்கள் ஜோதி, அசோக்குமார், உதவி ஆணையர் சந்திரன் உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அய்வுக்கு வந்தனர்.
அப்போது பொது தீட்சிதர்கள் அவர்களை வரவேற்றனர். அப்போது அதிகாரிகள் தீட்சிதர்களிடம் கோவில் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்ய வந்திருப்பதாக தெரிவித்தனர். ஆனால் பொது தீட்சிதர்கள் ஆய்வுக்குறிய சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் நடக்கிறது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே அதிகாரிகள் கோவிலில் உள் பிரகாரம், வெளி பிரகாரத்தில் தற்போதைய மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். அதனைத்தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபம் முகப்பில் தரையில் அமர்ந்து ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் கோவில் தீட்சிதர்கள் அதிகாரிகளிடம் கோவில் நடை சாத்தும் நேரம் ஆகிவிட்டது என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் 4 மணிக்கு கோவிலுக்கு வருவதாக புறப்பட்டு சென்றனர். பின்னர் அதிகாரிகள் மீண்டும் 5 மணி அளவில் கோவிலுக்கு வந்தனர்.
கோவிலுக்கு வந்த அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தீட்சிதர்கள் சார்பில் வக்கீல் சந்திரசேகர் பேசினார். சட்டரீதியாக வந்தால் மட்டுமே ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
திட்டமிட்டப்படி இன்று 2-வது நாளாக ஆய்வு நடத்த அதிகாரிகள் குழுவினர் வந்தனர். அவர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் கோவில் பகுதியில் ஆய்வு செய்தனர்.