தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை நெல்லை வருகை: உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் ஏற்பாடு

Published On 2023-10-26 14:41 IST   |   Update On 2023-10-26 14:41:00 IST
  • நெல்லை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவில் தாழையூத்து விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
  • பாளை, நாங்குநேரி தொகுதிகளுக்கு உட்பட்ட 2 இடங்களில் கலைஞர் நூலகங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

நெல்லை:

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

மேலும் மாவட்டங்களில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கனவே சுற்றுப்பயணம் முடித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) நெல்லையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இதற்காக இன்று மாலை அவர் நெல்லை வருகிறார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நெல்லை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான தாழையூத்து பண்டாரகுளம் அருகில் மாவட்ட பொறுப்பு அமைச்சகம், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு, கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அங்கிருந்து நெல்லை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவில் தாழையூத்து விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பாளை கே.டி.சி. நகர் அருகே நடைபெறும் நெல்லை கிழக்கு, மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

அப்போது பாராளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து இளைஞர்களுக்கு அவர் ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு கே.டி.சி. நகர் மாதா மாளிகையில் நெல்லை கிழக்கு, மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெறும் விழாவில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளை வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.

பின்னர் மாநகராட்சி எதிரே உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். அப்போது மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி மற்றும் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துகிறார். அப்போது நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்த உள்ளார்.

இதற்கிடையே பாளை, நாங்குநேரி தொகுதிகளுக்கு உட்பட்ட 2 இடங்களில் கலைஞர் நூலகங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Tags:    

Similar News