நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம்: கே.எஸ்.அழகிரி
- நீட் தேர்வுக்கு படிப்பதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது உலகத்துக்கே தெரியும்.
- காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது. அதற்கான ஆயத்த கூட்டங்களும் நடைபெற்று வருகிறது.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், நெல்லையில் மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வேல்துரை வீட்டிற்கு சென்று துக்கம் விசாரிப்பதற்காகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று சென்னையில் இருந்து ரெயில் மூலம் நெல்லை வந்தார்.
அவருக்கு நெல்லை மாநகர் மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர்கள் சங்கர பாண்டியன், கே.பி.கே. ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் கட்சியில் இருக்கும் அணிபோல் பா.ஜ.க. வின் அணியாக வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் செயல்படுகிறது. பா.ஜ.க. தலைமை என்ன சொல்கிறதோ அதை கேட்டு அவை செயல்படுகிறது. வருமானவரித்துறை செய்வது பொறுப்பற்ற செயல். தமிழகம், ராஜஸ்தான், கேரளா போன்ற எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் வருமானவரித்துறை சோதனை செய்வது பா.ஜ.க. வின் அரசாட்சி தோல்வியடைந்ததற்கு உதாரணம்.
எதிர்கட்சிகள் ஆளாத பிற மாநிலங்களில் சோதனை செய்ததே கிடையாது. அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. ஆனாலும் அவரை சிறையில் வைத்துள்ளனர்.
இந்தியாவில் சிறப்பாக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான டெல்லி முதல்-அமைச்சரை விசாரணைக்கு அழைத்து அவர் வர மறுத்து விட்டார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் யாரையும் விசாரணைக்கு இதுவரை அழைத்தது கிடையாது.
இந்தியா கூட்டணியை திராவிட முன்னேற்ற கழகம் வலிமையாக வழி நடத்துகிறது என்பதற்காக திமுக.விற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சோதனை நடப்பது அப்பட்டமாக பொதுமக்களுக்கு தெரிகிறது. அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு அரசு கவர்னருக்கு அனுப்பிய கோப்பில் இதுவரை கையெழுத்திடவில்லை. அ.தி.மு.க.வினர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க கூட கவர்னர் தயாராக இல்லை. நீட் தேர்வுக்கு படிப்பதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது உலகத்துக்கே தெரியும்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு மட்டும்தான் நீட் பயன் பெறும். மாநில அரசு பாடத்திட்டங்களில் படிப்பவர்களுக்கு நீட் எந்த வகையிலும் பயன் தராது. நீட் தேர்வு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு வரப்பிரசாதமாகவும், அவர்கள் பணத்தை வாரி குவிப்பதற்கும் உதவிகரமாக அமைகிறது. இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.
சாதியின் பெயரைச் சொல்லி சண்டையில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல். நாட்டில் பல முக்கியமான பிரச்சனைகள் உள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம். யாரையும் அரசியலுக்கு வரக்கூடாது என சொல்வதற்கு உரிமை கிடையாது. வரட்டும் பார்ப்போம். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருகிறார் வருகிறார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது. அதற்கான ஆயத்த கூட்டங்களும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.