தமிழ்நாடு

தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

Published On 2023-06-02 09:04 GMT   |   Update On 2023-06-02 09:04 GMT
  • சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை மாலை புளியந்தோப்பு பின்னிமில் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.
  • கூட்டத்துக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

சென்னை:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிக பிரமாண்டமாக விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை மாலை புளியந்தோப்பு பின்னிமில் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.

கூட்டத்துக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு வரவேற்று பேசுகிறார். பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி எம்.பி., அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், பேராசிரியர் காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், வேல்முருகன் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசு கிறார்கள்.

முடிவில் திரு.வி.க.நகர் வடக்கு பகுதிச் செயலாளர் செ.தமிழ்வேந்தன் நன்றி கூறுகிறார்.

Tags:    

Similar News