3மாதங்களுக்கு வழக்கத்தை விட வெயில் சுட்டெரிக்கும்- வானிலை இலாகா எச்சரிக்கை
- கடல் காற்றின் வருகையை பொறுத்து சென்னையில் வெயில் தாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
- அதிகாலை நேரங்களில் கடும் புழுக்கம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கோடை கால வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த வாரம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் பதிவாகி இருந்தது.
கடந்த 5 நாட்களாக கொங்கு மண்டலத்தில் 100 முதல் 102 டிகிரி வரை வெயில் தாக்கம் இருந்தது.
இந்த நிலையில் வெயில் தாக்கம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகரிக்கும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. எல்நினோ மாற்றம் காரணமாக இந்தியாவில் வெயில் கடந்த ஆண்டுகளை விட அதிகரிக்கும் என வானிலை இலாகா சுட்டி காட்டி உள்ளது.
குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் வெயில் தாக்கம் வரலாறு காணாத வகையில் உச்சத்துக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான இடங்களில் 105 டிகிரிக்கு மேல் வெயில் இருக்கலாம் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.
கடல் காற்றின் வருகையை பொறுத்து சென்னையில் வெயில் தாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதிகாலை நேரங்களில் கடும் புழுக்கம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயில் தாக்கம் அதிகமாகும் நாட்களில் வெப்ப அலை காற்றும் வீசும் என்று கூறப்பட்டுள்ளது. சிறுவர்கள், வயதானவர்கள், அதிக நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.