தமிழ்நாடு

நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்கிறேன்- அண்ணாமலை

Published On 2024-03-30 08:30 GMT   |   Update On 2024-03-30 08:30 GMT
  • தி.மு.க.வில் அப்பா அமைச்சர், மகன்கள் எம்.பி, எம்.எல்.ஏ.வாக உள்ளனர் என்பதனை நீங்கள் பார்க்க வேண்டும்.
  • டி.ஆர்.பாலு மனைவி சொத்து மதிப்பு 450 சதவீதம் அதிகரித்து உள்ளது.

கடலூர்:

கடலூரில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

அகில இந்திய அளவில் மோடி வழங்கக்கூடிய வாக்குறுதிகள், தமிழ்நாடு சம்பந்தமான வாக்குறுதி ஏப்ரல் முதல் வாரத்தில் வருகிறது. பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிடக்கூடிய தொகுதிக்கு தனி வாக்குறுதி வழங்கப்படும்.

கேள்வி:-பிரதமர் மோடி தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என கடும் விமர்சனம் எழுப்பி உள்ளார். ஆனால் தமிழகத்தில் பா.ம.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைப்பது தொடர்பாக தொடர்ந்து சர்ச்சை எழுப்புகிறது.

பதில்-டாக்டர் சவுமியா அன்புமணி தர்மபுரியில் போட்டியிடுகிறார். சுற்றுச்சூழலுக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து உள்ளார். மேலும் கட்சிக்கு வந்தவுடன் சீட்டு வாங்கவில்லை. தனி அங்கீகாரத்துடன் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இதில் எப்படி தவறு சொல்ல முடியும். மேலும் பா.ம.க.வில் தனி திறமை உள்ள வேட்பாளர்கள் தான் போட்டியிடுகின்றனர்.

மேலும் சிதம்பரம் தொகுதியில் முன்னாள் மேயரான பட்டியலின பெண் போட்டியிடுகிறார். இதன் மூலம் அவரை வெற்றி பெற செய்து உயர் பதவிக்கு கொண்டுவர போட்டியிட வைத்துள்ளோம். ஆனால் தி.மு.க.வில் அப்பா அமைச்சர், மகன்கள் எம்.பி, எம்.எல்.ஏ.வாக உள்ளனர் என்பதனை நீங்கள் பார்க்க வேண்டும்.

கடலூரில் தி.மு.க. எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்கு உள்ளது. இதுதான் சாதனையாகும். இதன் காரணமாக தான் கடலூர் பாராளுமன்ற தொகுதியை கூட்டணிக்கு தி.மு.க. தள்ளிவிட்டு உள்ளனர். ஆகையால் தங்கர் பச்சானுக்கு போட்டி யாரும் இல்லை.

கே-பா.ஜ.க.வுடன் உள்ள கூட்டணி கட்சிக்கு அவர்கள் விருப்பப்படும் சின்னம் வழங்கப்பட உள்ளதா குற்றச்சாட்டு உள்ளதே?

ப:-தேர்தல் ஆணையத்திற்கு தனியாக விதிமுறைகள் இருக்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி சார்பில் சின்னம் கிடைப்பதற்கு முன்னதாகவே பதிவு செய்யவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தில் யார் முன்னதாக சின்னம் கேட்டு பதிவு செய்கின்றார்களோ அவர்களுக்கு சின்னம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முதலில் அவர்களுக்கு தேவையான சின்னங்கள் தொடர்பாக கேட்டுள்ளனர். மேலும் இவர்கள் கேட்பதற்கு முன்பாக யாரும் அந்த சின்னத்தை கேட்கவில்லை. இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு சின்னம் ஒதுக்கி உள்ளனர். மேலும் ஒரு இடத்தில் நிற்கக்கூடிய கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் சின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவாகும். தேர்தல் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக நீதிமன்றங்கள் தெளிவான விளக்கம் மற்றும் உத்தரவு வழங்கி உள்ளனர்.

தற்போது நாம் தமிழர் கட்சி சீமான் ஒவ்வொரு முறையும் நடைபெறும் தேர்தலில் ஒவ்வொரு கட்சியினரும் புது புது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வந்து விட்டால் களத்தில் உறவினர்கள், அண்ணன், தம்பி என்று பார்க்கக்கூடாது. இங்கு நிற்கக்கூடிய தங்கர் பச்சான் பலமான வேட்பாளராக உள்ளார். மேலும் பா.ம.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிற்க வைத்துள்ளனர். நான் ஐ.பி.எஸ். ஆக இருந்தபோது சொந்த பணத்தில் நிலம் வாங்கினேன். தற்போது அதனுடைய மதிப்பு 11 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் டி.ஆர்.பாலு மனைவி சொத்து மதிப்பு 450 சதவீதம் அதிகரித்து உள்ளது. நான் தேர்தலில் நிற்பது நல்ல அரசியலுக்காகவும், மாற்றத்திற்காகவும் நிற்கின்றேன். மேலும் கோயம்புத்தூரில் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கிடையாது என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளேன். அங்குள்ளவர்களிடம் சவால் விட்டு உள்ளேன். ஆனால் மற்ற கட்சியினர் இதனை சொல்ல தயாராக உள்ளனரா? நேர்மையான அரசியலை நான் முன்னெடுத்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News