தமிழ்நாடு

வெள்ளம் பாதித்த பகுதிகளில் கே.எஸ். அழகிரி ஆய்வு

Published On 2023-12-20 09:01 GMT   |   Update On 2023-12-20 09:01 GMT
  • தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
  • நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏராளமான பொதுமக்கள் பள்ளிகள் மற்றும் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியான ஊட்டுவாழ்மடத்தில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து அரசாங்க உதவிகள் கிடைக்கின்றனவா என்று கேட்டறிந்தார்.

பின்னர் நாகர்கோவில், வடிவீஸ்வரம் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. ஏற்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு கே.எஸ். அழகிரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதேபோன்று நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ள பாதிப்புகள் ஒவ்வொரு முறையும் ஏற்பட்டு வருகிறது. இது இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது. எனவே தமிழக அரசு இதனை ஒரு முக்கிய பிரச்சினையாக கருதி நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில் வசதி படைத்தவர்கள் இல்லாதவர்கள் என்ற பாகுபாடு பார்க்க கூடாது. அதற்கான ஒரு முழு திட்டத்தையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சென்னையை பொறுத்த வரை 17 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது. இந்தியாவில் எந்த மாநிலமும் இதுபோன்று 17 மணி நேரம் தொடர்ச்சியாக மழையை சந்தித்த மாநிலம் கிடையாது எனினும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் ஓராண்டுக்குள் ஆக்கிரமிப்புகளை நீர் நிலைகளில் இருந்து அகற்றி வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News