தமிழ்நாடு

எடப்பாடி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு 10 நாள் அவகாசம்- வழக்கை முடித்து வைத்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2023-04-12 07:26 GMT   |   Update On 2023-04-12 07:26 GMT
  • கர்நாடக தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் வகையில், கட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் அங்கீகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
  • ஏற்கனவே கர்நாடகாவில் முன்பு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி மற்றும் பொதுக்குழு முடிவுகளை அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்டவிதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கர்நாடக தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் வகையில், கட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் அங்கீகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே கர்நாடகாவில் முன்பு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என அ.தி.மு.க. தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. எனவே இந்த கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி தரப்பு வக்கீல் ஏற்கனவே பலமுறை இதுபோன்ற பதிலையே தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. கடந்த ஜூலை 2022 முதல் இதனையே கூறுகின்றனர். ஆனால் முடிவெடுக்கவில்லை. மேலும் கர்நாடக தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். எனவே 10 நாட்கள் அவகாசம் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல் "சென்னை ஐகோர்ட்டில் இது தொடர்பான மூல வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை தற்போதைக்கு விசாரிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

தங்கள் தரப்பும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ், ஏற்கனவே இந்த விவகாரத்தில் முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் கேட்டிருந்த நிலையில் அந்த அவகாசத்தை வழங்குவதாகவும் 10 நாட்களில் அ.தி.மு.க. சட்டவிதிகள் திருத்தத்தை அங்கீகரிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும், அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்ட விதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை முடித்து வைப்பதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News