தமிழ்நாடு

அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு- சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சி.வி.சண்முகம் வாக்குமூலம்

Published On 2022-09-17 08:31 GMT   |   Update On 2022-09-17 08:31 GMT
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. தலைமை கழக மேலாளரான மகாலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரிடமும் பல்வேறு தகவல்களை கேட்டு பெற்றனர்.
  • தற்போது சி.வி.சண்முகத்திடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த ஜூலை 11-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மோதல் வெடித்தது.

இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் சரமாரியாக கற்களை வீசி தாக்கி கொண்டனர். அ.தி.மு.க. அலுவலகத்துக்கு அன்றைய தினம் ஆதரவாளர்களோடு ஓ.பி.எஸ். சென்றபோதுதான் பெரிய கலவரம் ஏற்பட்டது.

அ.தி.மு.க. அலுவலகத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அறைகளில் இருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை தூக்கிச் சென்றனர்.

இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 2 முறை நேரில் சென்று விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்கிருந்த பல்வேறு தடயங்களை சேகரித்தனர். மோதல் சம்பவம் நடைபெற்ற போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளையும் கைப்பற்றினர். இதனை வைத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரை அடையாளமும் கண்டுள்ளனர்.

இது தொடர்பாக புகார்தாரரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் பல்வேறு தகவல்களை திரட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்துக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்றனர்.

அங்கு வைத்து மோதல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய போலீசார் அது தொடர்பான தகவல்களை முழுமையாக சேகரித்துள்ளனர். குறிப்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது குறித்தும், அப்போது ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பாகவும் சி.வி.சண்முகம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அறைகளில் இருந்த பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றதாகவும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தனர்.

சி.வி.சண்முகம் அளித்த புகாரில் இதனை முழுமையாக தெரிவித்து இருந்தார். அதில் யார்-யார் சதி திட்டத்துடன் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் புகுந்தனர் என்பது பற்றிய விவரங்களும் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாகவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் சி.வி.சண்முகத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சி.வி.சண்முகம் விரிவான பதிலை வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தில் மோதலில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது குறித்தும், மோதலில் யார்-யாருக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது பற்றியும் சி.வி. சண்முகம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். இந்த வழக்கில் புகார்தாரர்களிடம் மட்டுமே இதுவரை விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. தலைமை கழக மேலாளரான மகாலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரிடமும் பல்வேறு தகவல்களை கேட்டு பெற்றனர். தற்போது சி.வி.சண்முகத்திடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அலுவலக மோதல் சம்பவத்தில் சென்னையை சேர்ந்த ஓ.பி.எஸ் ஆதரவு முக்கிய பிரமுகர் ஒருவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக எடப்பாடி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இவரை போன்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பலருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் குறி வைத்துள்ளனர்.

இந்த வழக்கு இன்னும் சில தினங்களில் ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை வேகப்படுத்தி உள்ளனர். விரைவில் விசாரணை அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

Tags:    

Similar News