தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரிக்கு நாளை வருகை- மாவட்ட முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2024-03-28 05:48 GMT   |   Update On 2024-03-28 05:48 GMT
  • முதலமைச்சர் வருகையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
  • மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தருமபுரி:

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

இதையொட்டி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து அவர் கடந்த 22-ந்தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தடங்கம் கிராமத்தில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் செல்லும் சாலையில் உள்ள பி.எம்.பி. கல்லூரி மைதானத்தில் நாளை (29-ந் தேதி) மாலை பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தருமபுரி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வக்கீல் ஆ.மணி மற்றும் இந்தியா கூட்டணியின் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தருமபுரிக்கு வருகிறார். பின்னர் அவர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். கூட்டத்தை முடித்து கொண்டு மீண்டும் அவர் கார் மூலம் சேலம் செல்கிறார்.

முதலமைச்சர் வருகையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. தடங்கம் கிராமம் அருகே பிஎம்பி சல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் நின்று பேசுவதற்கு மேடை அமைக்கும் பணியும், பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அமரும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், கூட்டத்தை சுமார் 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் வசதியும், பொதுமக்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தி.மு.க. வினர் செய்து வருகின்றனர்.

மேலும் முதலமைச்சர் பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டப் பணிகளை தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனியப்பன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்கள் டி.மதியழகன் எம்.எல்.ஏ., ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினர்.

அப்போது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

முதலமைச்சர் வருகையையொட்டி தருமபுரி மாவட்டம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News