தமிழ்நாடு செய்திகள்

ஊட்டியில் முகாம் அலுவலகம் திறந்த மத்திய மந்திரி எல்.முருகன்: பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க ஏற்பாடு

Published On 2023-10-12 10:14 IST   |   Update On 2023-10-12 10:14:00 IST
  • தி.மு.க அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது ஒன்றும் அதிசயம் கிடையாது.
  • அ.தி.மு.க. கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்.

ஊட்டி:

நீலகிரி பாராளுமன்ற தொகுதி என்பது ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

தற்போது தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா இந்த தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற பணிகளை தற்போதே தொடங்கி விட்டது.

அதிலும் தமிழக பா.ஜனதா கட்சி தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்பதை கண்டறிந்து அந்த தொகுதிகளுக்கு என்று தனி கவனம் செலுத்தி வருகிறது. அதில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியும் ஒன்றாகும்.

அந்த தொகுதியில் வெற்றி வாகை சூடும் நோக்கத்துடன், கடந்த சில மாதங்களுக்கு முன்பே எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி பா.ஜ.க தனது தேர்தல் பணியை தொடங்கி விட்டது.

அங்குள்ள பூத் கமிட்டியை வலுப்படுத்துவது, மக்களை நேரில் சந்திப்பது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறுவது என பல பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த தொகுதியில் தற்போது மத்திய மந்திரியாக இருக்கும் எல்.முருகன் போட்டியிடலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மத்திய மந்திரி எல்.முருகன் நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஊட்டியில் தனது முகாம் அலுவலகத்தை திறந்துள்ளார். இதன் மூலம் மத்திய மந்திரி எல்.முருகன் பாராளுமன்ற தேர்தலில் நீலகிரியில் போட்டியிடுவது உறுதியாகிறது.

இவருக்கு போட்டியாக தி.மு.க. சார்பில் இங்கு ஏற்கனவே 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள தி.மு.க எம்.பி. ஆ.ராசாவே இந்த முறையும் இங்கு போட்டியிட உள்ளார். அவரும் கடந்த சில மாதங்களாக நீலகிரியிலேயே முகாமிட்டு தனது பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

இவர்கள் தவிர அ.தி.மு.க தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளது. அந்த கட்சியும் மிக முக்கியமான பிரமுகரையே இங்கு நிறுத்தும். இப்படி தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க என 3 பேரும் மிக மக்களுக்கு பரிட்சியமான வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் நீலகிரி பாராளுமன்ற தொகுதி வி.ஐ.பி., தொகுதியாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முகாம் அலுவலகத்தை திறந்து வைத்த மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது ஒன்றும் அதிசயம் கிடையாது. தி.மு.க என்றாலே ஊழல்தான். ஆ.ராசா மிகப்பெரிய ஊழல்வாதி. அவரது ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது, இந்த தொகுதி மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற அரசியல் வாதிகளை மக்கள் வெறுக்கத் தொடங்கி விட்டனர். ஊழல்வாதிகளிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்பதே மக்களின் கருத்து.

அ.தி.மு.க. கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். தமிழகத்தில் 9 தொகுதிகளும், நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளும் பா.ஜ.க வெற்றி பெறும் தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News