தமிழ்நாடு

விருதுநகர் மாவட்ட ஜெயிலில் ரகளை- 23 கைதிகள் மீது வழக்குப்பதிவு

Published On 2023-06-13 06:15 GMT   |   Update On 2023-06-13 06:15 GMT
  • விருதுநகரில் உள்ள மதுரை ரோட்டில் மாவட்ட ஜெயில் உள்ளது.
  • 10 பெரிய அறைகளை கொண்ட இந்த ஜெயிலில் முதல் 2 அறைகளில் ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கில் கைதானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர்:

விருதுநகரில் உள்ள மதுரை ரோட்டில் மாவட்ட ஜெயில் உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற 10 பெண் கைதிகள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

10 பெரிய அறைகளை கொண்ட இந்த ஜெயிலில் முதல் 2 அறைகளில் ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கில் கைதானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கொலை மிரட்டல் இருப்பதால் ஜெயிலில் பாதுகாப்பு மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. இதற்கு மற்ற கைதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பாரபட்சம் காட்டுவதாக புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளேடு வைத்திருந்ததாக சந்தேகம் ஏற்பட்ட ஒரு கைதி வேறொரு அறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு மற்ற கைதிகள் எதிர்ப்பு தெரிவித்து வார்டன்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்தனர். அப்போது சிறையில் இருந்த பொருட்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த உயர் போலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கைதிகளை சமரசம் செய்தனர். மேலும் ரகளை செய்த கைதிகள் மதுரை மத்திய ஜெயிலுக்கு மாற்றப்பட்டனர். இதற்காக கைதிகள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்ட போது ஒரு கைதி தலையால் வேன் கண்ணாடியில் மோதினார். இதில் கண்ணாடி உடைந்து அந்த நபருக்கும் காயம் ஏற்பட்டது.

மேற்கண்ட சம்பவங்களால் விருதுநகர் மாவட்ட ஜெயில் போர்க்களமானது.இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக ஜெயில் போலீஸ் சூப்பி ரண்டு ரமா பிரபா விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார்.

இதன் அடிப்படையில் ஜெயிலில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும், 3 பேரையும் தாக்கியதாகவும் வடிவேல் முருகன், கண்ணன், மலைக்கண்ணன், முத்துப்பாண்டி, முத்தழகு, முத்துகிருஷ்ணன், ராமர், பாலாஜி, பார்த்தி, ஜோதி மணி, செந்தில்குமார், பால குமார், கார்த்திக் பாண்டி உள்பட 23 கைதிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News