தமிழ்நாடு

இந்துக்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி- ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் பழனி கோவிலில் மீண்டும் பேனர் வைக்கப்பட்டது

Published On 2023-08-27 02:23 GMT   |   Update On 2023-08-27 02:23 GMT
  • பழனி மின்இழுவை ரெயில்நிலைய பகுதியில் ‘இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதி' என்ற பேனரை மீண்டும் வைக்க வேண்டும் என இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
  • கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பழனி:

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பிற மதத்தினர் வருவதை தடுக்க 'இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதி' என்ற வாசகம் கொண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலிலும் மின்இழுவை ரெயில்நிலைய வாயில் பகுதியில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது மின்இழுவை ரெயில்நிலைய பகுதியில் வைக்கப்பட்டிருந்த அந்த பேனர் அகற்றப்பட்டது.

இதற்கிடையே சமீபத்தில் மாற்று மதத்தை சேர்ந்த பெண்கள் சிலர் மின்இழுவை ரெயில் மூலம் பழனி மலைக்கோவிலுக்கு செல்ல முயன்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பழனி மின்இழுவை ரெயில்நிலைய பகுதியில் 'இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதி' என்ற பேனரை மீண்டும் வைக்க வேண்டும் என இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

மேலும் பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்ற பக்தர், பழனி முருகன் கோவிலில் 'இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதி' என்ற பேனரை வைக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பழனி முருகன் கோவிலில் மீண்டும் பேனர் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நேற்று பழனி முருகன் கோவில் மின்இழுவை ரெயில்நிலையம் முன்பு 'இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்' என்ற வாசகம் கொண்ட பேனர் மீண்டும் வைக்கப்பட்டது.

கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News