தமிழ்நாடு

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்- ஜனாதிபதிக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை

Published On 2024-03-23 08:46 GMT   |   Update On 2024-03-23 08:46 GMT
  • தி.மு.க. அரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும்.
  • இதற்குப் பிறகும் ஆளுநர் பதவியில் அவர் தொடர்வது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே அவர் தாமே முன் வந்து பதவி விலக வேண்டும்.

சென்னை:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு கவர்னர் விதித்தத் தடைகளையெல்லாம் மீறி சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் காரணமாக பொன்முடி மீண்டும் உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது தி.மு.க. அரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும்.

உச்சநீதிமன்றத்துக்குத் தவறான தகவல்களை அளிப்பது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணிப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு மாறாக நடந்து கொள்வது, கவர்னருக்கான மரபுகளை மீறி அரசியல் ரீதியாகத் தலையிடுவது என்று தமிழ்நாடு கவர்னர் தொடர்ந்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

'ஆளுநருக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா? என்று கேட்ட உச்ச நீதிமன்றம், "ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததன் மூலம் உச்ச நீதிமன்றத்தை அவமதித்துள்ளார். முதல்-அமைச்சரின் தனிப்பட்ட அதிகாரத்தில் தலையிட்டு உள்ளார்.

அரசியல் சாசனத்தை ஆளுநர் முறையாகப் பின் பற்றவில்லை" என்றெல்லாம் கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்து இருக்கிறது. இதற்குப் பிறகும் ஆளுநர் பதவியில் அவர் தொடர்வது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே அவர் தாமே முன் வந்து பதவி விலக வேண்டும்.

ஆளுநர் பதவி விலகாவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News