தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மாவட்ட தலைவர்கள் மாற்றம்

Published On 2024-02-23 13:40 IST   |   Update On 2024-02-23 13:40:00 IST
  • பாராளுமன்ற தேர்தல் வரை தற்போதைய தலைவர்களே நீடிப்பார்கள்.
  • பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு பற்றியும் மக்கள் மத்தியில் எடுத்து சொல்வோம்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றுள்ளார். வழக்கமாக புதிய தலைவர்கள் பொறுப்பேற்றதும் தங்கள் ஆதரவாளர்களுக்கு பொறுப்புகள் வழங்குவார்கள். புதிதாக மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன்படி புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இதுபற்றி செல்வப்பெருந்தகையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இப்போதைக்கு மாவட்ட தலைவர்கள் மாற்றம் கிடையாது. பாராளுமன்ற தேர்தல் வரை தற்போதைய தலைவர்களே நீடிப்பார்கள். தேர்தலுக்கு பிறகு நிச்சயம் மாற்றம் இருக்கும். சிறப்பாக பணியாற்றுபவர்கள் தொடர்ந்து நீடிப்பார்கள். சரியாக பணியாற்றாதவர்கள் மாற்றப்படுவார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இது தேர்தல் காலம் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் தங்கள் முழு கவனத்தையும் தேர்தல் களத்தில் காட்டி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். தொடர்ந்து பதவியில் நீடிக்க இதுவும் அளவுகோலாக இருக்கும்.

சமூக வலைதள பிரசார அணியினருடன் நானும், மேலிட பொறுப்பாளர் அஜய்குமாரும் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசித்தோம்.

சமூக வலைத்தளங்களில் பிரசாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மோடி கொடுத்த வாக்குறுதிகளையும், அதை நிறைவேற்றாததையும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு பற்றியும் மக்கள் மத்தியில் எடுத்து சொல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈ.வி.கே. சம்பத்தின் 47-வது நினைவுதினத்தையொட்டி சத்திய மூர்த்தி பவனில் அவரது படத்துக்கு செல்வப்பெருந்தகை தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் எம்.பி. கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், டி.செல்வம், பொன்.கிருஷ்ண மூர்த்தி, ஓ.பி.சி.துணை தலைவர் சென்னை ரவி ராஜ், அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News