தமிழ்நாடு செய்திகள்

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் கனமழை: வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது

Published On 2023-08-30 10:26 IST   |   Update On 2023-08-30 10:26:00 IST
  • நேற்றிரவு எடப்பாடி, வீரகனூர், ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, சங்ககிரி உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.
  • தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகள் உள்பட எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று மதியம் சேலத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் அனல்காற்று வீசியதால் பொது வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்றிரவு எடப்பாடி, வீரகனூர், ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, சங்ககிரி உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.

குறிப்பாக எடப்பாடி, வீரகனூர் , ஆத்தூர் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகள் உள்பட எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

எடப்பாடி பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாத நிலையில் நேற்று பெய்த மழை அந்த பகுதிகளில் உள்ள கடலை பயிருக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலம் மாநகரில் நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கிய மழை அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் என அனைத்து பகுதிகளிலும் சாரல் மழையாக பெய்தது. தொடர்ந்து மாநகரில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக எடப்பாடியில் 30 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. வீரகனூர் 27, ஆத்தூர் 23.8, தம்மம்பட்டி 22, கெங்கவல்லி 15, சங்ககிரி 10.4, ஆனைமடுவு 8, கரியகோவில் 7, சேலம் 2.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 145.40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலை வானம் மேக மூட்டமாக காட்சி அளித்தது.

நாமக்கல் நகரில் நேற்று மாலை 5.30 மணியளவில் தொடங்கிய மழை இன்று அதிகாலை 1.30 மணி வரை கன மழையாக கொட்டிது. இந்த மழையால் நாமக்கல்-சேலம் சாலை, திருச்செங்கோடு சாலை, பரமத்தி, திருச்சி சாலை உள்பட அனைத்து சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் உள்பட எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

இதே போல எருமப்பட்டி, சேந்தமங்கலம், கொல்லிமலை உள்பட பல பகுதிகளிலும் 5 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது .

மாவட்டத்தில் அதிகபட்சமாக நாமக்கல் நகர பகுதியில் 10.8 செ.மீ. மழை பெய்துள்து. எருமப்பட்டி 80, குமாரபாளையம் 2.6, மங்களாபுரம் 18.30, மோகனூர் 38, பரமத்திவேலூர் 27, ராசிபுரம் 5.2, சேந்தமங்கலம் 63, திருச்செங்கோடு 5, கலெக்டர் அலுவலக பகுதி 64.50, கொல்லி மலை 70 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 498.60 மி.மீ. மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News