தமிழ்நாடு

செல்வக்குமார்.

நியோமேக்ஸ் மோசடி வழக்கில் சிக்கிய தி.மு.க நிர்வாகி வீட்டில் ரூ.5.80 லட்சம் பறிமுதல்

Published On 2023-11-11 04:33 GMT   |   Update On 2023-11-11 04:33 GMT
  • செல்வக்குமார் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2-ந்தேதி சரணடைந்தார்.
  • விசாரணைக்கு பிறகு மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் நகர தெற்கு தி.மு.க செயலாளராக இருந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி சுனோதா. இவர் கம்பம் நகர்மன்ற தலைவியாக உள்ளார். செல்வக்குமார் நியோமேக்ஸ் தனியார் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்து கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் அதிகளவில் முதலீடுகளை பெற்றார்.

மேலும் தனியார் பல்பொருள் அங்காடி, பேஷன்ஸ் கடை ஆகிய நிறுவனங்களையும் கம்பத்தில் நடத்தி வந்தார். இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பெற்ற வைப்புத்தொகையை திருப்பித்தராமல் இழுத்தடிப்பு செய்வதாக தேனி, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.

இதனிடையே செல்வக்குமார் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2-ந்தேதி சரணடைந்தார். இவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நவம்பர் 8-ந்தேதி விசாரித்து வாக்குமூலம் பெற்று அதனடிப்படையில் கம்பத்தில் உள்ள அவரது வீட்டில் துணை கண்காணிப்பாளர் மணிஷா தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ரூ.5.50 லட்சம் ரொக்கம், 46.200 கிராம் தங்கம், 139.800 கிராம் வெள்ளி ஆகியவற்றை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.5.80 லட்சமாகும். விசாரணைக்கு பிறகு மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News