தமிழ்நாடு

போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்: பா.ஜ.க.வினர் போராட்டம்

Published On 2023-08-22 07:11 GMT   |   Update On 2023-08-22 07:11 GMT
  • பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி பெயரில் வழிநெடுகிலும் பேனர், பதாகைகள் வைக்கப்பட்டது.
  • நயினார் பாலாஜி தலைமையில் பா.ஜ.க. தொண்டர்கள் எஸ்.என். ஹைரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை:

பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கிய முதல் கட்ட நடைபயணம் இன்றுடன் நிறைவடைகிறது.

இன்று மாலை நெல்லைபேட்டை பாறையடி காலனியில் இருந்து தொண்டர் சன்னதி வழியாக டவுன் ஆர்ச் வரை அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் கலந்து கொள்கிறார்.

இதையொட்டி அண்ணாமலை மற்றும் மத்திய மந்திரியை வரவேற்று டவுன் எஸ்.என். ஹைரோடு பகுதியில் பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி பெயரில் வழிநெடுகிலும் பேனர், பதாகைகள் வைக்கப்பட்டது.

இதையறிந்த போலீஸ் உதவி கமிஷனர்கள் ஆவுடையப்பன், காமேஸ்வரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் டவுன் பகுதிக்கு சென்று, அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அதனை அகற்ற உத்தரவிட்டனர். அதன் பேரில் அங்குள்ள ஒரு பேனரை போலீசார் அகற்றினர்.

இதையறிந்த நயினார் பாலாஜி தலைமையில் பா.ஜ.க. தொண்டர்கள் எஸ்.என். ஹைரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு போலீஸ் உதவி கமிஷனர்கள் ஆவுடையப்பன், காமேஸ்வரன் ஆகியோர் சென்று பா.ஜ.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனுமதி இல்லாமல் பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு உரிய முறையில் அனுமதி வாங்க வேண்டும். இல்லையென்றால் அதனை அகற்றுவோம் என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு பேனர்களுக்கு அனுமதி வாங்கும் ஏற்பாடுகளை தொடங்கினர்.

Tags:    

Similar News