தமிழ்நாடு செய்திகள்

தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்த்தப்படும்: பா.ம.க. நிழல் நிதிநிலை அறிக்கையில் தகவல்

Published On 2024-02-14 13:22 IST   |   Update On 2024-02-14 13:23:00 IST
  • சமையல் எரிவாயுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். இனி ரூ.418-க்கு சமையல் எரிவாயு கிடைக்கும்.
  • குழந்தைகளுக்கு தனித்தமிழில் பெயர் சூட்டும் பெற்றோருக்கு ரூ.5,000 வெகுமதி வழங்கப்படும்.

சென்னை:

பா.ம.க. சார்பில் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

2024-25-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.5,12,617 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,94,146 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,00,180 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். 2023-24-ம் ஆண்டில் சொந்த வரி வருவாய், மொத்த வரி வருவாய் இலக்குகளை தமிழக அரசால் எட்ட இயலாது. அதனால், வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும்.

குளிர்பானங்கள், வெள்ளை சர்க்கரை, பீட்சா, பர்கர், சான்ட்விச், ஷவர்மா போன்ற அதிக இனிப்பு, உப்பு, கொழுப்பு கொண்ட பொருட்களுக்கு 30 சதவீதம் சுகாதார வரி விதிக்கப்படும். தமிழ்நாட்டில் ஜூலை 25-ந்தேதி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க காவல்துறையில் தனிப்பிரிவு தொடங்கப்படும். மே 1-ந்தேதி முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைபடுத்தப்படும். தமிழ்நாட்டில் அனைத்து மது, பீர் ஆலைகள் மூடப்படும்.

சமையல் எரிவாயுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். இனி ரூ.418-க்கு சமையல் எரிவாயு கிடைக்கும். ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உரிமைத்தொகை ரூ.1000-லிருந்து, ரூ.2000ஆக உயர்த்தப்படும். முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை ரூ.3,000ஆக உயர்த்தப்படும்.

குழந்தைகளுக்கு தனித்தமிழில் பெயர் சூட்டும் பெற்றோருக்கு ரூ.5,000 வெகுமதி வழங்கப்படும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைத்தால், ரூ.1,000 வழங்கப்படும். தமிழ் வழியில் படித்த வர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும். தமிழ்வழியில் படித்தோருக்கு உயர்கல்வியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். மழலையர் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி கட்டாயமாக்கப்படும். தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பப்படும். நடப்பாண்டில், 2 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் மாத வருமானம் ரூ.40,000 வரை உள்ள பணிகளில் 80 சதவீதம் தமிழர்களுக்கு வழங்க புதிய சட்டம் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் தொழில், உற்பத்தி, தளவாட மேலாண்மை உள்ளிட்டவற்றின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த பணிகள் மூலம் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும்.

படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்திருத்தம் செயல்படுத்தப்படாது. தமிழ் நாட்டில் ரத்து செய்யப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் முழுமையாக வேறு பேருந்து முனையங்களுக்கு மாற்றப்பட்டபின், அது பூங்காவாக மாற்றப்படும். கோயம்பேட்டில் அமைக்கப்படும் பூங்கா 66.4 ஏக்கர் பரப்பளவில் இருக்கும். சென்னையின் மிகப்பெரிய பூங்காவாக அது அமையும்.

தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படாது. தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 55லிருந்து 17ஆக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மின் கட்டணம் குறைக்கப்படும். மாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்படும். பொதுமக்களின் உடல் நலம் குறித்த விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும்.

தமிழக சட்டப்பேரவை குறைந்தது ஆண்டுக்கு 3 முறையும், 100 நாட்களும் கூடி மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆக்கபூர்வ விவாதம் நடத்துவதை தமிழக அரசு உறுதி செய்யும். தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்த்தப்படும். காவல் துறையினருக்கு 8 மணிநேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் பணிகள் தடுக்கப்படும். 2024-25ஆம் ஆண்டில் வேளாண் துறைக்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்படும். தமிழ்நாட்டில் உயர்வகை அரிசி, இரண்டாம் தரவகை பொன்னி அரிசி ஆகியவற்றை முறையே கிலோ ரூ.50, ரூ.45 என்ற விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த இருவகை அரிசிகளுக்கும் கிலோவுக்கு ரூ.15 வீதம் தமிழக அரசு மானியம் வழங்கும். வேளாண்துறை முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி திரட்டப்படும்.

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக விரிவாக்கப்படும். என்.எல்.சி. 3-வது சுரங்கம் திட்டம், முதல் இரு சுரங்கங்களை விரிவாக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்படும். பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான சட்டமுன்வரைவை விரைவாக நிறைவேற்றும்படி, மத்திய அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக்கொள்ளும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு, இரா அருள் எம்.எல்.ஏ, திலகபாமா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News