பிரதமர் மோடி 25-ந்தேதி திருப்பூர் வருகை: பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு பணிகள் தீவிரம்
- திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் பாதயாத்திரை நிறைவு விழா பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது.
- 10 லட்சம் பேரை திரட்டி பிரம்மாண்டமாக மாநாடு போல் பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
பல்லடம்:
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என், என் மக்கள் என்ற தலைப்பில், மத்திய அரசின் சாதனைகள், திட்டங்களை விளக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். வருகிற 18-ந்தேதியுடன் இந்த பயணம் நிறைவடைகிறது.
இதையடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் பாதயாத்திரை நிறைவு விழா பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இதற்காக மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் எதிரில் உள்ள 400 ஏக்கர் தரிசு நிலத்தில் முட்செடிகள், புதர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.10 லட்சம் பேரை திரட்டி பிரம்மாண்டமாக மாநாடு போல் பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பது உறுதியான நிலையில், அவர் பங்கேற்கும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. பிரதமர் எப்போது தேதி கொடுத்தாலும் அன்றைய தினம் பொதுக்கூட்டத்தை நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.
இந்தநிலையில் பிரதமர் மோடி வருகிற 25-ந்தேதி பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு பணிகளை பா.ஜ.க.வினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதனிடையே திருப்பூரில் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட என் மண், என் மக்கள் பாதயாத்திரையை 25-ந்தேதி திருப்பூரில் நடத்தவும் அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.