ஓணம் பண்டிகை: உடுமலையில் காய்கறிகள் வாங்க குவிந்த கேரள வியாபாரிகள்
- இடுக்கி மாவட்டம் மூணாரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக நிரம்பி வருகின்றன.
- கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேரள வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வேலை மற்றும் பல்வேறு பொருட்கள் வாங்குவதற்காக கேரள மக்கள் தினமும் உடுமலைக்கு வருகின்றனர்.
தற்போது கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. இதனால் பண்டிகைக்காக தேவையான பொருட்களை வாங்குவதற்காக கேரள மக்கள் உடுமலையில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக உடுமலை உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கடை வீதிகளில் கேரள மக்கள்-வியாபாரிகள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை வாங்கி வருகின்றனர்.
கேரள மாநிலம் மறையூர், காந்தலூர், மூணாறு செல்லும் பஸ்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக 9/6 செக்போஸ்ட் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்காக தனியார் ஜீப்புகளில் பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். இடுக்கி மாவட்டம் மூணாரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக நிரம்பி வருகின்றன. அங்குள்ள ஓட்ட ல்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை விருந்துக்காக காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், வெல்லம், பூக்கள் உள்ளிட்டவற்றை வாங்கி விற்பனை செய்வதற்காக மாநில எல்லையோரம் கடை வைத்துள்ள வியாபாரிகள் உடுமலையில் குவிந்து, மூட்டை மூட்டையாக பொருட்களை வாங்கி சென்றனர். ஓணம் பண்டிகை கொண்டாட கேரள மாநிலம் செல்வதற்காக குவிந்த பொது மக்களால் உடுமலை பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேரள வாழ் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.