தமிழ்நாடு

திருமண கோலத்தில் மாட்டு வண்டியில் ஊர்வலமாகச் சென்ற புதுமண தம்பதி

Published On 2023-11-21 08:16 GMT   |   Update On 2023-11-21 08:16 GMT
  • விவசாயம் என்பது எங்களின் கனவு மட்டுமல்ல. உணர்வுடன் ஒருங்கிணைந்தது.
  • இளைய தலைமுறையினர் தமிழ் கலாசாரத்தை பின்பற்றி, விவசாயத்தை ஊக்குவித்தால் மட்டும் போதும். நம் நாடு நிச்சயமாக வல்லரசாக மாறும்.

குனியமுத்தூர்:

தமிழ் கலாசாரத்தை தலைநிமிர செய்யும் வகையில் கோவை மாவட்டம் போத்தனூர் அருகே செட்டிபாளையம் பகுதியில் ஒரு ருசிகர சம்பவம் நடந்து உள்ளது. அங்கு புதிதாக திருமணமான புதுமண தம்பதி மாட்டு வண்டியில் புகுந்த வீட்டுக்கு சென்று அசத்தி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கோவை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன்- பாக்கி யலட்சுமி தம்பதியின் மகன் ஆனந்தகுமார். இவருக்கும் மெட்டுவாவி பகுதியை சேர்ந்த மகாலிங்கம்-சரோஜினி தம்பதியின் மகள் பவதாரணிக்கும் செட்டிபாளையம் செல்லாண்டியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்ததும் மணமக்கள் ஆனந்தகுமார்-பவதாரணி ஆகியோர் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும்வகையில் புகுந்த வீட்டுக்கு மாட்டு வண்டியில் செல்வதென முடிவு செய்தனர். தொட ர்ந்து அங்கு அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டி வரவழைக்கப்பட்டது. அதில் மணமக்கள் ஏறி அமர்ந்தனர். தொடர்ந்து மணமகன் ஆனந்தகுமார் மாட்டு வண்டியை ஓட்டினார். பக்கத்தில் அமர்ந்து இருந்த மணமகள் பவதாரணி மகிழ்ச்சியில் கைகளை அசைத்தபடி வந்தார்.

செட்டிபாளையம் சாலையில் மாட்டுவண்டி யில் திருமண ஊர்வலம் சென்ற மணமக்களை நேரில் பார்த்து பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.

இதற்கிடையே சமூகவலைதளத்தில் மணமக்கள் மாட்டுவண்டியில் திருமண ஊர்வலம் சென்ற காட்சியை ஒருசிலர் சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர். அது இணையதளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து மணமகன் ஆனந்தகுமார் கூறியதாவது:-

நான் பி.இ. சிவில் என்ஜினீயரிங் முடித்து உள்ளேன். பவதாரணி எம்.எஸ்.சி ஐ.டி முடித்து உள்ளார். எங்களின் குடும்பம் பரம்பரையாக விவசாயத்தை தொழிலாக கொண்டது. எனவே விவசாயம் என்பது எங்களின் கனவு மட்டுமல்ல. உணர்வுடன் ஒருங்கிணைந்தது.

நாங்கள் எளிமைக்காக மட்டுமின்றி உரிமைக்காகவும் மாட்டுவண்டியை தேர்வு செய்து உள்ளோம். என்னதான் நாம் இன்றைக்கு மாடர்ன் உலகில் வாழ்ந்து வந்தாலும், விவசாயம் இல்லை என்றால் உயிர் வாழ முடியாது.

மேலும் எந்த நாட்டில் விவசாயம் தோல்வி அடைகிறதோ, அங்கு அனைத்து துறைகளும் படுதோல்வியை சந்தித்து பரிதாப நிலைக்கு தள்ளப்படும். இளைய தலைமுறையினர் தமிழ் கலாசாரத்தை பின்பற்றி, விவசாயத்தை ஊக்குவித்தால் மட்டும் போதும். நம் நாடு நிச்சயமாக வல்லரசாக மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வண்டியில மாமன் பொண்ணு, ஓட்டுறவன் செல்லக்கண்ணு என ஒரு சினிமா பாடல் உண்டு. புது தம்பதி மாட்டு வண்டியில் செல்லும் காட்சி அந்த பாடலை நினைவுப்படுத்தும் விதமாக உள்ளது.

Tags:    

Similar News