தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 2 பேர் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜர்

Published On 2024-02-08 06:02 GMT   |   Update On 2024-02-08 06:23 GMT
  • நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்திக், தென்னகம் விஷ்ணு ஆகிய இருவரும் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் இன்று ஆஜரானார்கள்.
  • பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

சென்னை:

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 2-ந் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் வீடு உள்பட 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 30-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் 10 சிம்கார்டுகள், 4 பென் டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இவைகளை ஆய்வு செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதற்கிடையே சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் மற்றும் 2 நிர்வாகிகள் ஆஜரானார்கள். அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்திக், தென்னகம் விஷ்ணு ஆகிய இருவரும் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் இன்று ஆஜரானார்கள். அவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஓமலூரில் போடப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாகவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டி உள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். யார்-யாருடன் அவர்கள் செல்போனில் பேசியுள்ளனர் என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

இதன் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News