தமிழ்நாடு செய்திகள்

சிறுபிள்ளை விளையாட்டைக் கண்டு பயந்து விடமாட்டேன்: மு.க.ஸ்டாலின் ஆவேச பதில்

Published On 2024-02-15 13:38 IST   |   Update On 2024-02-15 13:38:00 IST
  • கவர்னர் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இம்மாமன்றத்தையும் பயன்படுத்திக் கொண்டாரோ! என்று கருதும் வகையில் நடந்து கொண்டார்.
  • போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்! எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்!" என்பதுதான் இவர்களுக்கு நான் சொல்லும் பதில்!

சென்னை:

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் உரையாற்றுவது என்பது சட்டமன்ற மரபு. அரசின் கொள்கை அறிக்கையாக அமைச்சரவை தயாரித்துத் தருவதை அப்படியே இந்த மன்றத்தில் வாசிக்க வேண்டியது கவர்னரின் கடமை. ஆனால், கவர்னர் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இம்மாமன்றத்தையும் பயன்படுத்திக் கொண்டாரோ! என்று கருதும் வகையில் நடந்து கொண்டார்.

இது, எங்களை அல்ல; நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தையே அவமானப்படுத்தும் செயல் அல்லவா? கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்தும் காரியமல்லவா? மக்களாட்சி மாண்புக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசியல் சட்டத்தை மீறி, தான் ஏற்றுக்கொண்ட பதவிப்பிரமாணத்துக்கு மாறாக செயல்படுவது அல்லவா?

எங்களைப் பொறுத்தவரை, இதுபோன்ற எத்தனையோ தடைகளை உடைத்து எழுந்து வந்தவர்கள். "தடைக்கற்கள் உண்டென்றால், அதை உடைக்கும் தடந்தோள்கள் உண்டு" என்பதை 75 ஆண்டுகளாக மெய்ப்பித்துக் காட்டி வரும் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவன் என்ற தகுதியோடு சொல்கிறேன்..." நான் ஸ்டாலின்! அதுவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! பாசிசத்தை-எதேச்சாதிகாரத்தை-இந்தியாவில் நெஞ்சுயர்த்தி எதிர்கொண்டு இருக்கும் நாம், இதுபோன்ற சிறுபிள்ளை விளையாட்டுச் செயல்களைப் பார்த்து பயந்துவிட மாட்டோம். போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்! எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்!" என்பதுதான் இவர்களுக்கு நான் சொல்லும் பதில்!

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News