தமிழ்நாடு செய்திகள்

செந்தில் பாலாஜி


அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்- ஆளுநரிடம் பாஜக வலியுறுத்தல்

Published On 2022-09-10 16:01 IST   |   Update On 2022-09-10 16:01:00 IST
  • செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு பற்றி முதன் முதலில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் பேசினார்.
  • தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை:

தமிழக பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன் தலைமையில் ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்தார்கள். அப்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இத்தகவலை பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

2011ல் இருந்து 2014 வரை தமிழகத்தின் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து கழகங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும்போது, பணம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்ததாக, அந்த துறையின் அதிகாரியே வழக்கு பதிவு செய்கிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கைந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு பற்றி முதன் முதலில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் பேசினார்.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, யாரெல்லாம் குற்றம்சுமத்தினார்களோ அவர்கள் எல்லாம் ஐகோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்கிறார்கள். அதில், செந்தில் பாலாஜியிடம் கொடுத்த பணத்தை அவர் திருப்பி தந்துவிட்டார், எனவே, அந்த வழக்கை வாபஸ் பெறுகிறோம் என கூறியிருந்தனர். இதை எதிர்த்து, மின் துறையில் தேர்வு எழுதிய 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுக்கு குட்டு வைத்திருக்கிறது.

இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு ஊழல் தடுப்பு வழக்கில் அமைச்சர் ஒருவர் பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டிருக்கிறார், பணம் கொடுத்த 2 பேர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பணம் வாங்கிக்கொடுத்த ஒரு புரோக்கர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதன்பின்னர், நாங்கள் மனசு மாறிவிட்டோம், வழக்கு போடாதீர்கள் என அவர்களே ஐகோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக கொடுத்திருக்கிறார்கள். வழக்கிற்கு இதைவிட என்ன வேண்டும்? என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

அனைத்து விதமான தரவுகளையும் பார்க்கும்போது ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பு எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக காவல்துறை உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

அதனால்தான் பாஜக தலைவர்கள் ஆளுநரை சந்தித்துள்ளனர். ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Tags:    

Similar News