தமிழ்நாடு

மருத்துவ மாணவர் மதன்குமார் உடலுக்கு அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கலெக்டர் உமா ஆகியோர் அஞ்சலி செலுத்திய காட்சி.

ஜார்கண்டில் கொலை செய்யப்பட்ட நாமக்கல் மருத்துவ மாணவர் உடல் தகனம்- அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா அஞ்சலி

Published On 2023-11-04 05:38 GMT   |   Update On 2023-11-04 05:38 GMT
  • டாக்டர் மதன்குமார் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • டாக்டர் மதன்குமாரின் உடலை பார்த்து கதறி அழுத படியே அஞ்சலி செலுத்தினர்.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்தவர் மதியழகன், காண்டிராக்டர். இவரது மனைவி பூங்கொடி. இவர்களது மகன் மதன்குமார் (29).

எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுவியல் மேற்படிப்பு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் திடீரென மதன்குமார் மாயமானார். சகமாணவர்கள் அவரை தேடிய போது விடுதியின் பின்புறம் மதன்குமார் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விடுதியின் மாடியில் வைத்து டாக்டர் மதன்குமாரை கொலை செய்த மர்ம நபர்கள் அவரது உடலை தீ வைத்து எரித்ததாகவும், பின்னர் பாதி எரிந்த நிலையில் உடலை தூக்கி கீழே போட்டதில் அந்த உடல் விடுதியின் பின்புறத்தில் விழுந்து கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே டாக்டர் மதன்குமார் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மதன்குமார் உடல் விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டியை அடுத்த புதூரில் உள்ள சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் அவரது உடல் இன்று காலை கொண்டு வரப்பட்டது.

இதையொட்டி அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர். அவர்கள் டாக்டர் மதன்குமாரின் உடலை பார்த்து கதறி அழுத படியே அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர் அஞ்சலி

தொடர்ந்து அவரது உடல் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா உள்பட பலர் மதன்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது உடல் நாமக்கல் மின் மாயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே மகன் சாவுக்கான காரணத்தை கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News