தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம்: நிலுவையில் உள்ள வழக்கை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்- வைகோ

Published On 2023-06-02 07:51 GMT   |   Update On 2023-06-02 07:51 GMT
  • காங்கிரஸ் அரசு பொறுப்புக்கு வந்தவுடன் மேகதாது அணை கட்டும் பணியை தொடங்கப் போவதாக கூறி இருக்கிறது.
  • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு சொட்டுநீர்கூட காவிரியில் வராது.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மாதம் பொறுப்பு ஏற்றது. கர்நாடக மாநில துணை முதல்வரான டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி வரிசையில் இருந்தபோது, மேகதாது அணை கட்ட வலியுறுத்தி பெங்களூருவில் இருந்து 10.01.2022-ல் நடை பயணம் தொடங்கி, 10 நாட்கள் பல ஊர்கள் வழியாகச் சென்று 19.01.2022 அன்று மேகதாதுவில் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்.

தற்போது மீண்டும் காங்கிரஸ் அரசு பொறுப்புக்கு வந்தவுடன், மேகதாது அணை கட்டும் பணியை தொடங்கப் போவதாக கூறி இருக்கிறது. நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணை கட்டும் பணியை தொடங்குவோம். எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம் என்று கூறி இருப்பது கண்டனத்துக்கு உரியது.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு சொட்டுநீர்கூட காவிரியில் வராது. உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16, 2018-ல் அளித்தத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 177.25 டி.எம்.சி. நீர், கானல் நீராகவே போய்விடும் ஆபத்துதான் விளையும்.

எனவே ஒன்றிய பா.ஜ.க. அரசு மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கவே கூடாது. தமிழ்நாட்டின் மரபு உரிமையை கர்நாடக மாநிலம் பறித்துக் கொள்வதை ஏற்கவே முடியாது.

எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு விரைவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News