தமிழ்நாடு

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி வெளியேற்றப்பட்ட விவகாரம்: 2 டாக்டர்கள்-நர்சு உள்பட 4 பேர் இடமாற்றம்

Published On 2023-03-12 05:55 GMT   |   Update On 2023-03-12 05:55 GMT
  • நீரிழிவு நோயாளி நடுரோட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • பா.ஜ.க. நிர்வாகிகள் டீனிடம் புகார் தெரிவித்தனர்.

மதுரை:

மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணவறை வாசலில் நோயாளி ஒருவர் மயங்கி கிடந்தார். அவரது கால் அழுகிய நிலையில் இருந்தது. இது குறித்து பா.ஜ.க. நிர்வாகி முத்துக்குமாருக்கு தெரிய வந்தது. அவர் நிர்வாகிகளுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பிணவறை வாசலில் கிடந்த முதியவரை மீட்டு விசாரணை நடத்தினார்.

அதில் அவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (வயது 36) என்பது தெரிய வந்தது. இவருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தது. இதற்காக கடந்த ஒரு மாதமாக மதுரை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் பாதிப்பு குறையவில்லை.

இதற்கிடையே நோயாளி பிரகாஷ்ராஜின் உறவினர்கள் கைவிட்டு சென்றனர். இதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிரகாஷ்ராஜை ஆஸ்பத்திரி வாசலில் விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் டீனிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் பிரகாஷ்ராஜ் மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நீரிழிவு நோயாளி நடுரோட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், இது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த குழுவினர் விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட வார்டில் வேலை பார்த்த 2 டாக்டர்கள், ஒரு நர்சு, தூய்மை பணியாளர் ஆகிய 4 பேர் பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து 2 டாக்டர்கள், நர்சு உள்பட 4 பேரையும் மதுரை பாலரங்காபுரம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக இடமாற்றம் செய்து டீன் உத்தரவிட்டார்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி நடுரோட்டில் வீசப்பட்ட விவகாரத்தில், 2 டாக்டர்கள் உள்பட 4 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News