காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் பலத்த மழை
- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த மழை கொட்டுகிறது.
- தொடர் கனமழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
காஞ்சிபுரம்:
குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்கிறது.
இதே போல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த மழை கொட்டுகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் திடீரென கன மழை கொட்டித்தீர்த்தது.
ஒலிமுகமது பேட்டை, ஓரிக்கை, செவிலிமேடு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் பகுதி, பஸ் நிலையம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
தொடர் கனமழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் காணப்பட்டு வருகிறது.