தமிழ்நாடு செய்திகள்

கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.

இரவு நேரங்களில் கனமழை: ஏற்காட்டில் கடும் குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2023-09-25 10:29 IST   |   Update On 2023-09-25 10:29:00 IST
  • மழை மற்றும் குளிர் காரணமாக இரவு 7 மணிக்கு மேல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.
  • சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நேற்று இரவும் ஏற்காட்டில் கனமழை கொட்டி தீர்த்து. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மழையால் ஆங்காங்கே சாலைகளில் வெள்ளம் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் பல முக்கிய சாலைகள் சேறும் சகதியுதாக காட்சியளிக்கிறது.

இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்காட்டில் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மழை மற்றும் குளிர் காரணமாக இரவு 7 மணிக்கு மேல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. பகல் நேரங்களிலும் குளிர் தாங்கும் ஆடைகளான சுவட்டர், ஜர்கின் உள்ளிட்டவற்றை அணிந்தே வெளியே வருகின்றனர்.

மழை காரணமாக ஏற்காட்டில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல் மலைப் பாதையில் ஆங்காங்கே உள்ள நீர் வீழ்ச்சிகள், கிளியூர் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

பொதுவாக வார இறுதி நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் முகாமிட்டு பொழுதை கழித்து செல்வர். ஆனால் நேற்று மழை பொழிவு காரணமாக குறைந்தளவே சுற்றுலா பயணிகளை காண முடிந்தது.

சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஏற்காட்டில் பெய்துவரும் மழை மற்றும் குடும் குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News