தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபயணத்தை தொடரும் அண்ணாமலை

Published On 2024-02-09 11:40 IST   |   Update On 2024-02-09 12:54:00 IST
  • அண்ணாமலையின் நடைபயணத்தையொட்டி கும்மிடிப்பூண்டியில் பாரதிய ஜனதா தொண்டர்கள் குவிந்தனர்.
  • ஆவடி மற்றும் மீஞ்சூரில் அண்ணாமலை மீண்டும் நடைபயணத்தை தொடங்குகிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை தொடங்கிய அவர் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அண்ணாமலை நடைபயணம் செல்லும் இடங்களில் பாரதிய ஜனதா தொண்டர்கள் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள்.

சட்டமன்ற தொகுதி வாரியாக ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட இடத்தில் நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை அங்கு திரளும் மக்கள் மத்தியில் பேசி வருகிறார். அப்போது பாரதிய ஜனதா அரசின் சாதனைகளை விளக்கி பேசும் அவர் தி.மு.க. அரசுக்கு எதிரான கருத்துக்களையும் கூறி வருகிறார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அண்ணாமலையின் நடைபயணம் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார களமாகவும் மாறி இருக்கிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் நடைபயணத்தை முடித்து விட்டு அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று தனது பயணத்தை தொடங்கினார்.

திருத்தணியில் காலையில் நடைபயணத்தை மேற் கொண்ட அவர் மாலையில் திருவள்ளூரிலும் இரவில் ஸ்ரீபெரும்புதூரிலும் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக அவரது நடைபயணம் நடைபெற்றது. இன்று காலையில் அண்ணாமலை கும்மிடிப்பூண்டியில் நடைபயணம் மேற்கொண்டார். கும்மிடிப்பூண்டி ரெட்டைமேடு சந்திப்பில் இருந்து தொடங்கிய நடைபயணம் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

அண்ணாமலையின் நடைபயணத்தையொட்டி கும்மிடிப்பூண்டியில் இன்று பாரதிய ஜனதா தொண்டர்கள் குவிந்தனர். மாவட்ட நிர்வாகிகளும், பாரதிய ஜனதா கட்சியினரும் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கும்மிடிப்பூண்டி நடைபயணத்தை முடித்து விட்டு அண்ணாமலை அங்கேயே ஓட்டலில் தங்கினார்.

பின்னர் மாலையில் ஆவடி மற்றும் மீஞ்சூரில் அண்ணாமலை மீண்டும் நடைபயணத்தை தொடங்குகிறார். பொன்னேரி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் பச்சையம்மன் கோவில் ஆர்ச் பகுதியில் இருந்து மாலை 5 மணி அளவில் தொடங்கும் நடைபயணம் மீஞ்சூர் முப்பாத்தம்மன் கோவில் பகுதியில் நிறைவடைகிறது.

இதன் பின்னர் இரவு 7 மணி அளவில் ஆவடி சட்ட மன்ற தொகுதியில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். ஆவடி காமராஜர் சிலை அருகில் இருந்து தொடங்கும் நடைபயணம் அங்குள்ள 'டிரெண்ட்ஸ்' ஷோரூம் பகுதி வரை சென்று முடிவடைகிறது.

இதன் பின்னர் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் அண்ணாமலை நடைபயணத்தை மேற்கொள்கிறார் இதன் முடிவில் சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி திடலில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். இந்த பொதுக் கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது.

Tags:    

Similar News