தமிழ்நாடு

தருமபுரியில் திறந்த வேனில் எடப்பாடி பழனிசாமி பேசிய காட்சி.

ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்- எடப்பாடி பழனிச்சாமி

Published On 2022-08-09 07:16 GMT   |   Update On 2022-08-09 07:16 GMT
  • தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது.
  • அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயத்திற்கும் வீடுகளுக்கும் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

தருமபுரி:

அ.தி.மு.க.வின் இடைக்கால பொது செயலாளர் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தருமபுரிக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-

அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம். அதனை கண்ணை இமை காப்பதுபோல காப்பாற்றியவர் ஜெயலலிதா. இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இயக்கத்தில் உங்களின் ஆசியோடு இடைக்கால பொது செயலாளர் என்ற உயர்ந்த பொறுப்பு கிடைத்துள்ளது.

இந்த பொறுப்பை ஏற்றவுடன் உங்கள் அழைப்பை ஏற்று ஓடோடி வந்துள்ளேன். இங்கு எழுச்சிமிகு வரவேற்பை கொடுத்துள்ளீர்கள்.

இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி, அவர்களின் வாழ்வை பாதிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்கள் கருத்து கேட்பை நடத்துவது சரியல்ல.

தருமபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட எண்ணேகோல் புதூர் தும்பல அள்ளி மற்றும் அணையாளம் அணைக்கட்டு முதல் தூள்செட்டி ஏரி வரையிலான நீர் பாசன திட்டங்கள் தற்போது ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது.

இதை விரைவாக செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் இங்குள்ள விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவார்கள். இதேபோன்று பாலக்கோடு பகுதியில் ஜெர்தலாவ் கால்வாய் முதல் புலிக்கரை ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் நீர் பாசன திட்டமும் முனைப்புடன் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நீர் பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி மாவட்டம் செழிப்பான மாவட்டமாக மாறும்.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. இதை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயத்திற்கும் வீடுகளுக்கும் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசு மின் கட்டண உயர்வு அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட வரி ஏற்றத்தால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உட்பட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழக அரசு பொய் வழக்குகளை போட்டு வருகிறது. இந்த வழக்குகளை முறியடித்து அ.தி.மு.க. வீறு கொண்டு எழும்.

தி.மு.க.வுடன் கைகோர்த்துக்கொண்டு அ.தி.மு.க.வில் இருந்த சில துரோகிகளால் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், உல்பா பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News