தமிழ்நாடு

தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சி வகுப்பு: எம்.பி.க்கள்-எம்.எல்.ஏ.க்கள் கட்டாயம் பங்கேற்க உத்தரவு

Published On 2024-01-11 04:22 GMT   |   Update On 2024-01-11 04:22 GMT
  • எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
  • 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுவதால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற இருக்கும் முகவர்களின் கூட்டம் தொகுதி வாரியாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.

இதேபோல் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் கட்சியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் கட்சி நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இப்போது மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னெடுப்பில் வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) மாவட்ட கழகங்கள் நடத்தும் மாவட்ட அளவிலான "சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு" நடைபெறுகிறது.

இப்பயிற்சி வகுப்பில் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணவி, மகளிர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News