தமிழ்நாடு

மகாபாரத கிருஷ்ணன் போல் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்- கே.எஸ்.அழகிரி

Published On 2024-02-04 07:20 GMT   |   Update On 2024-02-04 07:24 GMT
  • அ.தி.மு.க.வை பொறுத்த வரை கொள்கைகளை இழந்துவிட்டது.
  • ஆர்.எஸ்.எஸ். தயாரித்து கொடுத்த புள்ளி விவரம்.

சென்னை:

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும். அந்த கட்சிகள் அ.தி.மு.க. அணிக்கு வரவும் வாய்ப்பு உண்டு. அரசியலில் கடைசி நேரம் வரை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். அவரது இந்த கருத்து பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

அப்படி எதுவும் நடக்காது நடக்கவும் விடமாட்டோம். அ.தி.மு.க.வை பொறுத்த வரை கொள்கைகளை இழந்துவிட்டது. சுயமரியாதையை இழந்துவிட்டது. தமிழக நலனை இழந்து விட்டது. சிறுபான்மையினர் நலனை இழந்துவிட்டது. மோடியை மட்டுமே தலை குனிந்து வணங்கியதால் அவர்களது சுயமரியாதை தான் பறிபோனது.


எங்களை பொறுத்தவரை கொள்கைரீதியாக மதசார் பற்ற அணியாக ஒன்றுபட்டு உள்ளோம். எங்கள் எண்ணம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை வேரறுக்க வேண்டும் என்பது தான்.

தொகுதிகளை பொறுத்த வரை எந்த கட்சிக்கும் கூடுதலாகவும் கிடைக்காது. குறைத்தும் வழங்க மாட்டார்கள்.

மகாபாரத போரில் கிருஷ்ணர் எப்படி வெற்றி இலக்கை நோக்கி தேரை ஓட்டினாரோ அதே போல் மு.க.ஸ்டாலினும் கடந்த தேர்தலில் அற்புதமாக கூட்டணி தேரை ஓட்டி வெற்றியை தேடி கொடுத்தார்.

அதே போல் இந்த தேர்தலிலும் மதசார்பற்ற கூட்டணி தேரை அற்புதமாக ஓட்டி மகத்தான வெற்றி பெறுவார்.

காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு பணிகளில் சிறுபான்மையினர் குறைவாக இருந்ததாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை புள்ளி விவரம் வெளியிட்டு உள்ளார். எங்களுக்கும் புள்ளி விவரம் தெரியும்.

இது ஆர்.எஸ்.எஸ். தயாரித்து கொடுத்த புள்ளி விவரம். எந்த காலத்திலும் சிறுபான்மை மக்கள் உங்களோடு கைகோர்க்க மாட்டார்கள். அ.தி.மு.க., பா.ஜ னதாவோடு கைகோர்த்ததால்தான் சிறுபான்மையினர் அவர்களை கைவிட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News