தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி கூடுதல் தண்ணீரை சிக்கராயபுரம் குவாரிகளில் சேமித்து சென்னைக்கு குடிநீராக வழங்க முடிவு

Published On 2022-09-06 08:06 GMT   |   Update On 2022-09-06 08:06 GMT
  • செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் பாதையில் இருந்து கால்வாய் அமைக்க நீர் வளத்துறை முன்மொழிந்து உள்ளது.
  • காவனூர் அருகே செம்பரம்பாக்கம் உபரிநீர் செல்லும் பாதையின் குறுக்கே 40 மீட்டர் அகலத்தில் சிறிய தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது.

பூந்தமல்லி:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி ஆகும். ஏரியில் தற்போது 3,231 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் நிரம்பும்போது உபரி நீர் அடையாறு ஆற்றில் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலந்து வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது கல்குவாரி குட்டை நீர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்தும், ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது உபரி நீரை வீணாக வெளியேற்றுவதை தடுக்கும் வகையில் மாங்காடு அருகே சிக்கராயபுரத்தில் உள்ள கைவிடப்பட்ட குவாரிகளுக்கு தண்ணீரை அனுப்பி சேமித்து வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் பாதையில் இருந்து கால்வாய் அமைக்க நீர் வளத்துறை முன்மொழிந்து உள்ளது.

காவனூர் அருகே செம்பரம்பாக்கம் உபரிநீர் செல்லும் பாதையின் குறுக்கே 40 மீட்டர் அகலத்தில் சிறிய தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் கால்வாயில் எளிதாக தண்ணீர் செல்லும். ரூ.35 கோடி மதிப்பில் நடைபெறும் இந்த திட்டத்தின் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்றொரு ஆதாரத்தை உருவாக்கி, அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு தடுக்கப்படும்.

இதன் மூலம் கைவிடப்பட்ட குவாரிகளில் 400 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமிக்க முடியும்.

இந்த திட்டம் 8 அல்லது 9 மாதங்களில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News