தமிழ்நாடு (Tamil Nadu)

கச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க அநீதி இழைத்துள்ளன- ஜி.கே.வாசன்

Published On 2024-04-15 08:18 GMT   |   Update On 2024-04-15 08:18 GMT
  • தி.மு.க உடந்தையாக இருந்ததே தவிர, மீனவர்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
  • வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரசும், திமுகவும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றன.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தவறான செயல். காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்கு தி.மு.க உடந்தையாக இருந்ததே தவிர, மீனவர்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மீனவர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க இழைத்த இந்த அநீதியை மீனவ சமுதாயத்தினர் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். இந்த பிரச்சினையில் தேசிய ஜனநாயக கூட்டணி நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்படும் என மீனவர்கள் நம்புகின்றனர்.

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் மனதில் நிலவுகிறது. மூன்றாம் முறையாக மோடி பிரதமராக வருவது அவசியம் என மக்கள் நினைக்கின்றனர். எனவே அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.

பிரதமர் மோடியை 29 பைசா என உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இதை விட மிக மோசமான அரசியல் வேறு எதுவும் இருக்காது என மக்கள் நினைக்கின்றனர். மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி கொடுப்பதில் நேரு காலத்திலிருந்து கோட்பாடு இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சி, நீளம், அகலம், மாவட்டங்களின் பின்தங்கிய நிலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள அந்தக் கோட்பாட்டை யாராலும் மீற முடியாது. இதைப் பிரித்துப் பார்ப்பது திமுகவுக்கு வழக்கமாகிவிட்டது.

காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மனித நேயமற்ற இச்செயலுக்குக் கூட்டணி என்பதால் திமுக கண்டிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு வருத்தத்தை அளிக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரசும், திமுகவும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றன. இதை விவசாயிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழுக்கும், திருக்குறளுக்கும் முக்கியத்துவம் அளித்திருப்பது பெருமை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News