தமிழ்நாடு

வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

Published On 2024-04-02 05:33 GMT   |   Update On 2024-04-02 07:56 GMT
  • வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கிறார்.
  • வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று முழுவதும் டிரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர்:

வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று மாலை 6 மணி அளவில் தி.மு.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கிறார்.

இந்த கூட்டத்துக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் வரவேற்று பேசுகிறார். இதில் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். முடிவில் வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை வேலூர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் செய்துள்ளனர். இதற்காக கோட்டை மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் வருகையையொட்டி வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் குழுவைச் சேர்ந்த 13 படையினர் பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்தை சுற்றி மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் சோதனை செய்தனர்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று முழுவதும் டிரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News