தமிழ்நாடு

முதலமைச்சர் டீக்கடையில் அமர்ந்து இஞ்சி டீ குடித்த காட்சி - முதலமைச்சருடன் பள்ளி மாணவிகள் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி.

திருவண்ணாமலை மாடவீதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

Published On 2024-04-03 05:02 GMT   |   Update On 2024-04-03 05:02 GMT
  • காய்கறி மார்க்கெட்டில் நடந்து சென்று வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
  • பெண் வியாபாரி ஒருவர் முதலமைச்சருக்கு ஆர்வமுடன் பூ கொடுத்தார்.

வேங்கிகால்:

திருவண்ணாமலை அருகே உள்ள சோ.காட்டுக்குளத்தில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது.

இதில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருவண்ணாமலை, ஆரணி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். பொதுக்கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் பங்கேற்க நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

நேற்று இரவு அருணை கல்லூரி வளாகத்தில் தங்கினார். இதனை தொடர்ந்து இன்று காலை 8.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் வந்தார்.

கோவில் மாடவீதி, கல்லை கடை சந்திப்பு அருகே உள்ள காய்கறி மார்க்கெட்டில் நடந்து சென்று வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

நடைபாதை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்குகள் சேகரித்தார். பின்னர் மாடவீதியில் நடந்து சென்று, சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் அந்த வழியாக வந்த பொதுமக்களிடம் முதலமைச்சர் வாக்குகள் கேட்டார்.

ஜோதி பூ மார்க்கெட் சென்றார். வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் கொடுத்து வாக்குகள் கேட்டார்.

மார்க்கெட்டில் இருந்த பொதுமக்கள் அவருடன் கைகுலுக்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். அப்போது அனைத்து வியாபாரிகள் சார்பில் மலர்மாலை, சால்வை அணிவித்து, மலர் தூவி வரவேற்றனர். நடந்து சென்ற முதலமைச்சர் மீது மலர் தூவினர்.

அப்போது பெண் வியாபாரி ஒருவர் முதலமைச்சருக்கு ஆர்வமுடன் பூ கொடுத்தார். அதனை சிரித்தபடி முதலமைச்சர் வாங்கிக் கொண்டார். அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு சென்று கற்பூரம் விற்பனை செய்யும் பெண்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி ஓட்டு கேட்டார்.

இதனை தொடர்ந்து ராஜகோபுரத்தில் இருந்து தேரடி வீதிக்கு நடந்து சென்றார். அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது முதலமைச்சருடன் ஏராளமானோர் 'செல்பி' எடுத்துக்கொண்டனர். பள்ளி மாணவிகள் அவருடன் குழுவாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். அவர்கள் மகிழ்ச்சியில் உற்சாகமாக சென்றனர்.

கடைசியாக நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள டீ கடையில் மு.க.ஸ்டாலின் இஞ்சி டீ குடித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தால் மாடவீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பிரசாரத்தின்போது பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News