காங்கிரசுடன் 'கை' கோர்க்க அ.தி.மு.க. காய்களை நகர்த்துகிறதா? டெல்லியில் திரை மறைவு சந்திப்புகளால் பரபரப்பு
- காங்கிரஸ் தோல்விக்கு உதயநிதி பேசிய சனாதன எதிர்ப்பு பேச்சே காரணம் என்று டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்கள்.
- தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பற்றிய சந்தேகம் இருந்து வருகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி வியூகங்களும் தீவிரமாகி உள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் அ.தி.மு.க. வெளியேறியது. அதன்பிறகு அ.தி.மு.க.வை சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி என்பதை அந்த மக்கள் மத்தியில் நிலை நிறுத்துவதற்காக எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.
பா.ஜனதாவுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்று அறிவித்த எடப்பாடி பழனிசாமி தி.மு.க., மற்றும் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறார்.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க. உறவு தமிழகத்தில் பலமாக இருந்தாலும் அகில இந்திய அளவில் நெருடல்களை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம எதிர்ப்பு பேச்சு மற்றும் தி.மு.க. எம்.பி.யின் கோ மூத்திர பேச்சு ஆகியவை டெல்லி காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோல்விக்கு உதயநிதி பேசிய சனாதன எதிர்ப்பு பேச்சே காரணம் என்று டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்கள்.
இந்த நெருடலை பயன்படுத்தி காங்சுடன் கை கோர்க்க அ.தி.மு.க. தரப்பில் திரைமறைவு வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை டெல்லியில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக தி.மு.க. அமைச்சர்கள் மீது நடந்து வரும் வருமானவரி சோதனைகள், சமீபத்தில் ஏற்பட்ட புயல் மழை பாதிப்பில் அரசின் செயல்பாடுகள் ஆகியவை மக்கள் மத்தியில் தி.மு.க.வின் செல்வாககை குறைத்து இருப்பது பற்றியும் காங்கிரஸ் தலைவர்களிடம் எடுத்த கூறி வருகிறார்கள். எனவே பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி மீதான அதிருப்தி வெற்றியை தேடி தரும் என்று எடுத்து சொல்லி காங்கிரஸ் தலைவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
அ.தி.மு.க.வுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து வரும் சிலரும் டெல்லி காங்கிரஸ் தலைவர்களிடம் அ.தி.மு.க. கூட்டணியே கை கொடுக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.
ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பற்றிய சந்தேகம் இருந்து வருகிறது.
காங்கிரசுடன் உறவை வளர்த்து கொள்வதன் மூலம் இந்தியா கூட்டணியில் இடம் பிடித்து விட முடியும் என்று அ.தி.மு.க. கருதுகிறது. அவ்வாறு காங்கிரசுடன் கூட்டணி ஏற்படும் நிலையில் மேலும் சில கட்சிகள் தங்கள் பக்கம் வருவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி யின் கூட்டணி நகர்வுகள் கை கொடுக்குமா? என்பதற்கு வருகிற 19-ந்தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்துக்கு பிறகு தெளிவு கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.