தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வத்துக்கே ஆதரவு... பதவி போனாலும் கவலையில்லை: எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன் பேட்டி

Published On 2022-06-29 16:56 GMT   |   Update On 2022-06-29 16:56 GMT
  • ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது என எம்ஜிஆர் பேரன் ராமச்சந்திரன் தெரிவித்தார்
  • இப்போது ஒற்றை தலைமை வேண்டும் என்று சொல்வது ஏன்? என ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்

சென்னை:

ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர். ஓ.பி.எஸ். பக்கம் மிக குறைவான ஆதரவாளர்களே உள்ளனர். இந்நிலையில், கட்சியில் ஒற்றை தலைமை என்பதை தவிர்க்க வேண்டும். அப்படியே ஒற்றை தலைமை அவசியம் என்றால் அதில் ஒபிஎஸ்தான் தலைமை ஏற்க வேண்டும் என்று எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறியதாவது:-

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது. என் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கே. இதனால் என் பதவி பறிபோனாலும் கவலையில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடியும். எடப்பாடி பழனிசாமியை சாதாரணமாக சந்திக்க முடியாது.

கட்சி இரண்டாக பிரியக்கூடாது. உடையக்கூடாது என என் தாத்தா (எம்ஜிஆர்) நினைத்தார். அவர் கட்டிக்காத்த இயக்கம் இது. இப்போது ஒற்றை தலைமை வேண்டும் என்று சொல்வது ஏன்? என்று எங்களுக்கு புரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News