தமிழ்நாடு

பொன்னேரி அருகே மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை- மர்ம காய்ச்சலால் 100 பேர் பாதிப்பு

Update: 2023-05-30 08:03 GMT
  • 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
  • வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அனைவருக்கும் பரவி வருவதாக கூறினார்கள்.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட உப்பளம், பரிக்கப்பட்டு ஆகிய கிராமங்களில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 5 பேருக்க டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரத்திற்கு உடல்வலியும், கை, கால் மூட்டு வலியும் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்து உள்ளனர். மேலும் வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அனைவருக்கும் பரவி வருவதாக கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து காய்ச்சல் பரவிய உப்பளம், பரிக்கப்பட்டு கிராமங்களில் சுகாதாரப் பணி மாவட்ட துணை இயக்குனர் ஜவகர்லால், மீஞ்சூர் வட்டார மருத்துவர் மகேந்திரவர்மன் தலைமையில், 4 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் மருத்துவ முகாமிட்டு பரிசோதனை செய்து வருகிறார்கள். அதிக காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொசு மருந்து அடித்தல், வீடு வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்றுதல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல், தெருக்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த வகையான வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது என்று கண்டறியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரப் பணி மாவட்ட துணை இயக்குனர் ஜவகர்லால் கூறியதாவது:-

பொதுமக்கள் சேமித்து வைக்கின்ற தண்ணீரை மூடி வைக்க வேண்டும். வாரம் இரு முறை தண்ணீரை மாற்ற வேண்டும். குளிர்சாதன பெட்டியின் பின்பக்கம் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். இதனை சரியாக செய்யாததே அதிகமான வீடுகளில் காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக உள்ளது. காய்ச்சல் பாதித்த பொதுமக்கள் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். தன்னிச்சையாக கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடக்கூடாது. பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள் கொடுத்தால் சம்பந்தப்பட்ட மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகளில் அனைத்து வகை பரிசோதனையும் செய்யப்படும். மேலும் மலேரியா நிபுணர் குழுவும் ஆய்வு செய்து வருகிறது. கிராமங்களில் காய்ச்சல் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News