தமிழ்நாடு

797 பைபர் படகுகள் எண்ணெய் கழிவுகளால் சேதம்: எண்ணூர் மீனவர்களுக்கு ரூ.4கோடி வரை இழப்பு

Published On 2023-12-14 07:01 GMT   |   Update On 2023-12-14 07:01 GMT
  • ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணெய் கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது.

திருவொற்றியூர்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டி போட்ட மிச்சாங் புயல், எண்ணூர் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக சிதைத்துள்ளது என்றே கூறலாம். தாளங்குப்பம், நெட்டுக் குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக்குப்பம், சின்னக் குப்பம், முகத்துவாரம் குப்பம், சடையங் குப்பம், சிலிகர் பாதை கிராமம் ஆகிய 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அப்பகுதியில் தேங்கிய எண்ணை கழிவுகளால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

இந்த கிராமங்களில் வசிக்கும் 30 ஆயிரம் மீனவர்களும் தங்களது படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகி இருப்பதால் இனி என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துப்போய் உள்ளனர். மீனவர்கள் பயன்படுத்தி வந்த 797 படகுகளும், வலைகளும் எண்ணை கழிவு மற்றும் வெள்ளத்தில் மூழ்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 797 பைபர் படகுகள் மீன்பிடி வலைகள் சேதமாகி இருப்பதன் மூலம் ரூ.4 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி படகுகளை சீரமைத்து பயன்படுத்துவதற்கு பெரும் தொகை செலவாகும் என்பதால் அரசின் நிவாரண உதவிக்காக மீனவர்கள் காத்திருக்கிறார்கள். எண்ணை கழிவுகளில் மூழ்கிய வலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமாகி இருப்பதாகவும், எனவே மீன்பிடி வலைகளை புதிதாகவே வாங்க வேண்டி உள்ளது என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் சேதமான படகுகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படகுகளுக்கு ரூ.10 ஆயிரம், வலைகளுக்கு ரூ.5 ஆயிரம் என 15 ஆயிரம் வரையில் நிவாரணம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேத மதிப்புகளை கணக்கிட்டு மீனவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு உரிய அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே எண்ணை கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்த போதிலும் நேற்று முதலே அப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று 2-வது நாளாக படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணை கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்களின் மூலமாக நேற்று தொடங்க இருந்த பணிகள் நடைபெற வில்லை. இன்று அந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணை கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்து எண்ணைக் கழிவுகள் முழுவதையும் அகற்றி இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் வரை ஆகும் என்று மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அதற்கு முன்னரே எண்ணை கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News